Sunday, December 21, 2008

அவன் அப்படித்தான்

இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல வருட மனவுளைச்சல் இத்தனைக் காலங்களுக்கு பின்பு தணிவது எனக்கு ஆத்ம திருப்தியைத்தான் தருகிறதே தவிர சமுதாயத்தில் எங்கள் எதிர்காலத்தின் கேள்விக்குறிகளைப் பற்றி துளியும் கவலைக் கொள்ளாதவளாக இருக்கத் துணிகிறேன்.

எனது முதல் கருவின் சிதைவே என்னை இன்றும் உறுத்தும் இரணம். எந்தப் பெண்ணுமே கருவுற்ற அந்த இன்பகரமான செய்தியை முதலில் பகிர நினைப்பது கணவரிடம்தான். அந்த இன்பத்தையும் நொடிப் பொழுதில் இழந்து தவித்த துர்பாக்கியசாலி நான். கருவிலிருப்பது பெண் சிசுவென்றவுடன் கருச்சிதைவு செய்தாக வேண்டுமென்ற கட்டளை என் மூச்சைத் திணறடித்தது. அவருக்கு அப்படியொரு முகமிருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. படித்த, பகுத்தறிவுமிக்கவர்களுமா இப்படிப்பட்ட இழிசெயலில் ஈடுபடுவார்கள்? இதற்காக அவருடன் வாதம் ஏற்படும் போது, பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் திடீரென கையையோங்கிக் கொண்டு "நிறுத்துடி தேவடியாமுண்ட. பெரிய புடுங்கி மாதிரி பேசிக்கிட்டே போற, இந்த மயிரெல்லாம் இங்க வேணாம். 'அது' வேணும்னா அப்படியே போயிடு" என்று ஒரே வரியில் வசைபாடி என் வாயை அடைத்துவிட்டார்.

பகுத்தறிவில்லாத கீழ்மட்டத்து ஆண்களில் சிலர் தெருவோரங்களில் போதையில் பெண்டாட்டியை அடித்து மிதிக்கும் போது இப்படிப்பட்ட கொடூர மொழிகளில் பேசுவதைக் கேட்டதுண்டு. அந்த வசைகளை நானே கேட்க வேண்டிய அவல நிலையில் தள்ளப்படுவேன் என்று நினைத்திருக்கவேயில்லை. இப்படிப்பட்ட அவச் சொற்களைக் கேட்டேயிராத எனக்கு என் நரம்புகள் சுண்டியிழுத்து சிசுவுடன் நானும் சேர்ந்து தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் கூட எழுந்தது.

என் சந்தோஷத்தில் மகிழ்ச்சியுறும் என் பெற்றோர்களுக்கு இதைப் பற்றி செல்லாமலேயே இருந்துவிட்டேன். வேறு நெருங்கிய நட்புகளுடனும் ஆறுதலுக்காகக் கூட குறிப்பிடவில்லை. 'நல்லவேள அம்மா கிட்ட உண்டானத சொல்லல' என்று நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, சகலமும் கணவர் என்று இருக்கும் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெண்களின் தலையெழுத்தே அப்படித்தான். என்னதான் படித்த பட்டதாரிகளாக இருந்தாலும் கணவன் வகுத்ததே வாய்க்காலென்று இருக்க வேண்டிய சூழ்நிலை. எங்களுக்கென்று என்றுமே தனி முகவரி வைத்துக் கொள்ள முடிவதில்லை.

ஆண்களைச் சார்ந்தே, அவர்களின் அடக்குமுறையில் அடங்கியே வாழ வேண்டிய கட்டாயம். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அதை மீறி நடக்கும் போது 'கெட்டவள்', 'திமிர் பிடித்தவள்', 'அகங்காரம் கொண்டவள்' என்ற பெயர்களுடன் வாழ வேண்டியிருக்கும். எங்கள் நடத்தை மீதும் பலி வரும் அபாயமும் உண்டு. ஊரோடு ஒட்டி வாழ எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையில் முகமூடியுடன் திரிய வேண்டியுள்ளது. கணவர் தவறான பாதையில் சென்றாலும் சரி, தவறான செயல் புரிந்தாலும் சகித்துக் கொண்டு வாழவே தலைப்படுகிறோம். நானும் அப்படித்தான் அவர் கட்டளைக்கு அடிபணிந்து அந்தக் கொடூர செயலுக்குத் துணை் போனேன்.

இந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதென்றாலும் அந்த பாதிப்பிலிருந்து மீளவே பல வருடங்களானது எனக்கு. இப்படிப்பட்டவரின் குழந்தைக்குத் தாயாக வேண்டுமா என்ற கேள்வி என்னை துரத்த கருவுறாமல் மிகப் பக்குவமாக சில ஆண்டுகளைக் கடத்தினேன். ஆனாலும் தாயாக வேண்டுமென்ற உந்துதல் ஒருபுறமிருக்க. உறவுகளின் நச்சரிப்பும் 'மலடி' என்ற பட்டமும் பயமுறுத்தவே மீண்டும் கருவுற்றேன்.

காலம் சென்று உண்டாகியிருந்தாலும் எந்தச் சலனமுமில்லாமல் மறுபடியும் கருத்தரித்த சிசு ஆணா- பெண்ணா என்ற பரிசோதனைக்கு உள்ளானேன். நல்லவேளையாக இந்த முறை ஆண் என்பதால் மற்றுமொரு பாவச் செயலிலிருந்து தப்பித்தேன். ஆனால் ஆண் கரு என்று தெரிந்ததும் என் கணவருக்குத் தலைகால் புரியவில்லை அவ்வளவு சந்தோஷம். எக்களிப்பில் எகிறிக் குதித்தார். சும்மா சொல்லக் கூடாது மனுஷர் என்னை அந்த ஒன்பது மாதங்கள் மிக நன்றாகக் கவனித்துக் கொண்டார். என்னைக் கொண்டாடினார் என்று சொன்னாலும் தகும். எல்லாம் சரியாக நடந்தாலும் ஓரத்தில் எனக்கு ஒரு ஆசை இருந்து் கொண்டே இருந்தது. அது ஒரு பலி வாங்கும் வெறியென்று் கூடச் சொல்லலாம். 'கரு ஆண் என்று தெரிந்து அதனைச் சிதைக்காமல் வைத்துக் கொள்ள சம்மதித்து கொண்டாடுபவருக்கு பிறப்பது பெண்ணாக இருக்க வேண்டும், மருத்துவம், விஞ்ஞானமெல்லாம் பொய்யாக வேண்டும்' என்று வெறியின் வெளிப்பாடாகத் தீவிரப் பிராத்தனையும் செய்து கொண்டேன்.

ஆனால் பரிசோதனையின் முடிவின்படியே ஆண் மகவைப் பெற்றெடுத்தேன். குழந்தையின் முகம் கண்டதும் சகலமும் மறந்தது. அவன் பிறப்பைக் கொண்டாடினோம், மகிழ்ந்தோம். அவன் எங்களின் ஒரே மகனானான். செல்லமகனுக்குப் பார்த்துப் பார்த்து அனைத்து தேவைகளையும் தந்தோம். அவன் எங்களுக்கு எல்லாமும் ஆனான். என் முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்த பொடியன் வளரத் தொடங்கிய பிறகு எங்களுடன் ஒட்டுவதே கிடையாது. தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திய பிறகு அவனை யாரும் அணுகக் கூடாது என்று உத்தரவிட்டான். பதின்ம வயதென்றும் அப்பாவைப் போலவே மூர்க்க குணம் என்று விட்டதும் என் தவறுதான். ஒரு நாள் அவன் இல்லாத வேளையில் நான் அவன் அறையின் பூட்டைத் திருட்டு சாவிக் கொண்டு திறந்து பார்த்ததில் நான் கண்டவை எனக்கு ஒன்றுமே புரியாத வகையில் புதிராக இருந்தது. அந்தக் காட்சி கனவாக இருக்கக் கூடாதா என்று ஒரு கணம் நினைத்துக் கொண்டேன்.

பெண்களின் சாதனங்களாக அடுக்கியிருந்தது. ஆனால் யாருமே சுத்தம் செய்ய அனுமதிக்காத அவன் அறை தூசியும் தும்புமாக குப்பை நிறைந்திருக்கும் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றம். அவ்வளவு பிரகாசமாக சுத்தமாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அறையின் ஒரு பகுதியில் புள்ளி வைத்த வண்ணக் கோலமும். அறை பளிச்சென்று இருந்தாலும் என் மனதினுள் ஏதோ இருட்டு பற்றிக் கொண்டதாக ஒரு பயம் எழுந்தது. இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது, நான் நினைப்பது நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவன் தந்தையிடம் முறையிட்டேன். அவர் அவருடைய உளவாளியை அழைத்து அவனைக் கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்டு எனக்கு ஆறுதலாகவும் பேசினார்.

முன் தினம் நடந்ததை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. பூட்டிய அறையில் அப்பாவும் மகனும். கண்ணாடி சன்னல் வழியாக அவர்கள் முக பாவங்களை கவனிக்க முடிந்ததே தவிர என்னவென்று யூகிக்க முடியவில்லை. என்றுமில்லாத திருநாளாக அவர் மகனைக் கையோங்கிவிட்டார். ஆனால் அடிக்க மனமில்லாமல் குலுங்கி அவன் கால் அருகே விழுந்து அழுததைக் கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக வீராப்புக் கொண்ட, யாருக்கும் அடி படியாத மனிதர் இவன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிக் கதவைத் தட்டும் முன், கோபமாகக் கதவு திறக்கப்பட்டு மகன் வெளியேறிவிட்டான். குழந்தையாக சுருண்டு் கிடந்தவரை நடுவீட்டில் கிடத்தி "என்னங்க? சொல்லுங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படி. இந்தப் பாதகத்திக்கு ஒண்ணுமே புரியலையே. உங்கள நான் இப்படிப் பார்த்ததேயில்லையே, நான் உங்கள என்னான்னு சமாதானம் செய்வேன்" என்று விசும்பத் தொடங்கினேன். அவர் அவரையே கட்டுப்படுத்திக் கொண்டவராக 'வீட்டு வேலையாட்கள் முன்பு எதுவும் வேண்டாம்' என்ற வகையில் சைகை செய்து உள்ளறைக்குச் செல்ல நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.

உள்ளறையில் கதவைத் தாளிட்ட பிறகு அவர் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னங்களை மடமடவென்று கழுவிய அவர் முகத்தை நோக்கி நான் "என்னான்னு சொல்லுங்க" என்று பதற்றத்துடன் கேட்டேன்.

"என்னத்தடி சொல்லுவேன்... மகன் மகன்னு மார்தட்டிக்கிட்டு இருந்த பய என்னை மார்லயே குத்திப்புட்டான். ஆண் வாரிசு வேணும்னு ஆசப்பட்டேன் இப்ப அவன் நான் ஆணே இல்லன்னு சொல்றானே நான் என்ன செய்வேன்" என்று குரல் எழுப்பி அழுதவாறு அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைப் பற்றி விளக்கினார்.

சில உயிரியல் மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அவன் உணர்கிறானாம். இந்தக் கொடுமையை நான் என்னவென்று வெளிப்படுத்த? சின்னக் குழந்தையில் பெண் குழந்தையில்லாத குறையை தீர்க்கும் விதமாக இவனுக்குப் பட்டுப்பாவாடை உடுத்தி பொட்டு வைத்து மகிழ்ந்திருக்கிறேன். அதையே இப்பவும் வேண்டுமென்றால் நான் என்ன செய்வது? பல உளவியல் சிக்கல்களைக் கடப்பதால் பித்துபிடித்தாற் போல் திரிவதை அறிந்து அவனைத் தொடர்ந்து சென்று என் கணவர் வினவவே, ஒப்புக் கொண்டவனாக, அதனை தொடர்ந்துதான் அவன் வாழ்க்கை முறையும் அமையும் என்று தீர்க்கமாக சொன்னவன் மறு பாலினமாக மாற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்குக் காசு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். இவரோ 'கட்டுப்படுத்தி இப்படியே வாழ பழகிக் கொள் இல்லையேல் குடும்பத்திற்கு பெருத்த அவமானம்' என்று சமாதானம் செய்தும் "முடியாது என் பிரச்சனை உங்களுக்கு புரியாது. இனி உங்களுடன் தங்கவும் என்னால் முடியாது நான் என் இனத்தவர்களுடன் போகிறேன்" என்று கூறிய மகனின் காலிலேயே விழுந்து கெஞ்சியிருக்கிறார். ஒன்றும் செய்வதறியாமல் அவன் வெளியில் போய்விட்டான்.

அதன்பின் நான் இவருக்கு ஆறுதல் சொல்ல, அவர் எனக்கு ஆறுதல் சொல்லவென்று அந்த இரவு கழிந்தது. நேற்று விடியற்காலையில் தான் வீடு திரும்பினான். நான் ஏதேனும் கேட்டுவிடுவேனோ என்று பயந்தானோ அல்லது என்னை எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்ற கூச்சமோ தெரியவில்லை தலையைக் குனிந்தவாறு அவன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டான். அவன் மனது எனக்குப் புரியாமலில்லை. ஒரு தாயாக அவன் சொல்லாமலேயே அவன் விஷயங்கள் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியிருக்க கூடாது என்று எண்ணியவளுக்கு புலப்பட்டும் பொருட்படுத்தவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.

நேற்று முழுக்க நான் பலவாறு யோசித்தேன், எத்தனையோ பெற்றோர்களுக்கு மனநிலை குன்றியக் குழந்தைகள் இருந்தும், பிறவி ஊனமிருந்தும் அதனுடனே அன்பாகவே காலம் தள்ளும் போது இந்த உயிரியல் மாறுபாடு பெரிய விஷயமல்லவே?! எல்லோரும் இவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? சமுதாயக் கட்டமைப்பை நிர்ணயிப்பதும் நாம்தானே? சமுதாயத்திற்காக நாம் என்று வாழ்ந்தது போதும். சமுதாயம் எங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டுமே. இதனை ஒரு நோயாக பாவித்து அன்பை மருந்தாக்கி தருவோம். இவர் இப்படியாக அவர்கள் எப்படி காரணமாக முடியும்? அவர்களை ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம்? இத்தனை நாள் வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரச்சனையை இப்போது வீட்டுக்குளிருக்கும் போது சமாளிப்பதுதானே புத்திசாலித்தனம்? இப்படி உளவியல் சிக்கலிருப்பவனை வெளியில் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. அது ஒரு தவறான பாதைக்கு நாங்களே வழிவகை செய்வதல்லவா? வீதிக்குப் போய் ஒரு அலப்பறையாவது மட்டும் கவுரமா? அவன் விருப்பப்படியே தேவையான அறுவை சிகிச்சை செய்து கொள்ளட்டும். அவனை முழுக்க மகளாக மாற்றி அவன் உளவியல் பிரச்சனைகள் தீர அவனைப் போலவே இருக்கும் மற்றொருவரை தேடிப் பிடித்து துணையாக்கித் தருகிறேன். இல்லையேல் அவன் தனியாகவே வாழ முற்பட்டாலும் என் உயிருள்ள வரை துணை நிற்கப் போகிறேன். இதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? ஒரு தாயாக அவன் பக்கம் நின்று அவனுக்காக வாதாடி அவன் தந்தையையும் மாற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உறவினர்களைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் சிரித்தாலும் அழுதாலும் எட்டியிருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் உறவினர்கள் இதையும் பார்த்துவிட்டு போகட்டுமே. என் மனதை தெளிவாக்கிய பிறகு எனக்கு எதுவுமே தடையாகத் தெரியவில்லை. இது அவன் பிரச்சனை மட்டுமல்ல எங்கள் பிரச்சனையும் தானே? அப்படியிருக்க அவனை தனியாகத் தவிக்க அனுப்ப முடியுமா எங்களால்? எங்கள் முற்பகல் பாவம் பிற்பகலில் விடிந்திருக்கிறது. அதற்கு பாவம் அவனை பலிகடாவாக்க எனக்கு விருப்பமில்லை. கண்டிப்பாக என் கணவரும் இதனை உணர்ந்தேயிருப்பார்.

எங்கள் மகன் எங்களுக்கு புது மகளாவான். ஒருநாள் இந்தச் சமுதாயமும் எங்களுடன் கைகோர்க்கத்தான் போகிறது. அதில் எனக்குச் சந்தேமேயில்லை. முடிவுமெடுத்துவிட்டேன் அந்த முடிவிலிருந்து நாங்கள் மாறுபடப் போவதில்லை. எல்லா பின்விளைவுகளையும் யோசித்த பிறகு நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றேன்.

விடிந்தது, இன்றைய நாள் எனக்கு இன்னும் பிரகாசமாக.

Sunday, November 23, 2008

கேள்விகளால் ஒரு வேள்வி

துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.

இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் அது கேள்வி- பதில் நேரம் என்று தெரிந்தது. முதல் கேள்வியை முத்துகுமரன் சுவாரஸ்யத்துடன் ஆரம்பித்தார். 'புதுக்கவிதை எழுதுபவருக்கு மரபுக் கவிதை தெரிந்திருக்க வேண்டுமா?' என்று கேட்க. ’இப்படி உங்களுக்கு தோன்றுவதே பெரிய விஷயம்தான்’ என்று தொடங்கிய கவிக்கோ புதுக்கவிதையை பெரும்பாலோர் வசனக்கவிதையாக கருத்தை முதலிடம் கொண்டு எழுதிவிடுகிறார்கள். கருத்தை மட்டும் கொண்டது கவிதையாகிவிடாது நயமும் அவசியமென்றார்கள்.


ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுத் துளைத்ததற்கெல்லாம் ஊற்றாக தனது அனுபவத்தை வடித்தார்கள் கவிக்கோ. கவிதையை வரையறுக்கக் கேட்டதற்கு, அதை புரிய வைக்க ஒரு குட்டிக் கதை சொன்னார்கள். மனிதனை வரையறுக்க ஒரு கூட்டம் கூடியதாம் அதில் இரு கால் மிருகம் தான் மனிதன் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று ஒரு கோழியை கொண்டு வந்து ‘அப்ப இது மனிதனா’ என்று கேலி செய்ய, சரி இறகில்லாத இரண்டு கால் பிராணி தான் மனிதன் என்று முடிக்கும் முன் மறுபடியும் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இறகில்லாத கோழியை மறுபடியும் கொண்டு வந்து கேள்வி கேட்க - மனிதனை வரையறுக்க முடியாது என்று முடிவானதாம். அதே போல் தான் கவிதையையும் வரையறுக்க முடியாது என்று முடித்தார்கள்.

கூட்டத்தில் ஒருவர் நீங்கள் காக்கை பற்றி எழுதியிருந்தீர்கள் அந்த கருத்து இங்கிருக்கும் பலருக்கு ஒப்புதலாக இருக்காது அதனை கேட்க விரும்புகிறேன் என்றதும். பல விஷயங்களை பல தளத்தில் பல ஆண்டுகளாக எழுதித் தள்ளுபவருக்கு அது எப்படி நினைவிருக்கும் ஆகையால் என்ன எழுதியிருந்தேன் என்று கேட்டவரையே திரும்பி வினவ. அவரும் அவருக்கு நினைவூட்டுவதாக அதனை எடுத்து தர, புரிந்துக் கொண்ட கவிக்கோ அவர்கள் விவரித்தார்கள். அவர் கறி வாங்க சென்றிருந்த போது ஒரு காக்கை சக காக்கையை சாப்பிட விடாமல் கொத்துவதை கண்டு வியந்தவருக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றியதாம். காக்கையென்றாலே ஒரு வாய் சோறு கிடைத்தாலும் எல்லா காக்கைகளையும் அழைத்து உண்ணுமே இது என்ன வகையென்று யோசிக்கும் போது அவருக்கு பழங்காலத்தில் அரசர்களின் வினை நினைவுக்கு வந்ததாம். அரசர்கள் தான் உண்ணும் முன்பு அதில் விஷம் கலந்திருக்கிறதா என்று அறிந்து கொள்வதற்காக நிறைய பொருட்களும் தங்கமும் தந்து தன்னுடனே ஒரு ஆளை தமக்காக முதலில் சாப்பிட்டு அதில் விஷமில்லாத பட்சத்தில் அரசர்கள் உண்ணுவார்களாம். சிலர் இந்த விஷயங்களுக்காக மைனாவையோ அல்லது வேறு பிராணிகளையோ வளர்ப்பார்களாம். விஷத்தை அருகில் கொண்டு சென்றாலே மைனாவின் கண்கள் சிவந்துவிடுமாம். அந்த விஷயம்தான் இந்த காக்கையின் செயலும் - காக்கை இயற்கையான பண்டத்தை பகிர்ந்து உண்ணாது மனிதன் படைத்த செயற்கையான உணவின் மீது நம்பிக்கையில்லாமல் சக காக்கைகளை அழைத்து உண்ணக் கண்டு பிறகு தின்று கொள்கிறதாக அவர் உணர்ந்ததாக கூறினார். அவர் கூற்றில் உண்மையிருக்கிறதோ இல்லையோ சிந்தனை மிகவும் வித்தியாசமாக தோன்றியது.

தமிழை செம்மொழியாக்குவதின் பயன்களை விளக்கும் போது இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும், பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக்கியங்கள், பண்பாட்டுக் கருத்துக்கள், கலாச்சாரம் இவற்றை விளக்குவதற்காக தமிழ் தெரிந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வரக்கூடும். ஓய்வு பெற்றவர் தமிழ் அறிஞர்களுக்கு கூட நல்லவேளை வரக்கூடும் என்று நான் அறியாத விஷயங்களையும் அறிய வைத்தார்.

படிமம், குறியீடு பற்றி பேசும் போது ’பெண்ணே உன் கண்கள் மீன்கள்’ என்று வடித்த வாக்கியத்தில் கூட பல விஷயங்கள் ஒளிந்து கிடப்பதை கூறினார். கண்கள் மீன் வடிவில் இருப்பதால் சொல்லியிருக்கலாம் அல்லது வலை வீசச் சொல்கிறதாக எடுத்துக் கொள்ளலாம், எப்போதுமே தண்ணீரில் இருக்கிறது என்பதாகவும் பொருட்கொள்ளலாம் என்று ஒரே விஷயத்திற்கு பல கோணங்கள் உண்டு வாசிப்பவரின் அனுகுமுறையை பொருத்தே குறியீடுகளை புரிந்துக் கொள்ள முடியுமே தவிர எழுதுபவர் எல்லாவற்றையும் விளக்கி எழுத முடியாது அப்படி விவரித்திருந்தால் அது கவிதையல்ல என்பதற்கு உதாரணமாக

‘என் மனம்
அவளை நினைப்பேனென
அடம்பிடிக்கிறது - நான்
அதட்டினால் அழுகிறது’

என்று சொல்லும் போது மனதை படிமமாக்கி குழந்தையாக்கி கவிஞர் சொல்ல வருவது சிறப்பே தவிர மனம் குழந்தை போல் அடம்பிடிக்கிறது நான் அதட்டினால் அழுகிறது என்று விளக்குவதில் கவிதை காணாமல் போய்விடுகிறது என்று அவர் பாணியில் விளக்கினார்.

கவிஞர்கள் என்றாலே கொஞ்சம் கோபம் இருக்கும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்தான் எழுத்தில் வீரியமிருக்கும், வார்த்தைகளில் உண்மையிருக்கும் என்பதற்கு கவிக்கோ ஒரு சிறந்த சான்று. ‘வணக்கம்’ பற்றி எழுந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் சொல்லும் போது அவரை பேசவிடாமல் இடைமறித்து பேசிக்கொண்டே போனவரிடம் ‘நான் பேசி முடிக்கும் முன்பே நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு பேசிக் கொண்டே போனால் எப்படி’ என்று கண்டிப்பாக கேட்ட குரலில் நியாயமிருந்தது. அதையும் தொடர்ந்து விடாது இடைமறித்ததால் ஒலிவாங்கியை கீழே வைத்துவிட்டு ’நீங்களே பேசி முடியுங்கள்’ என்று சொன்னதில் அவர் கோபம் தெரிந்தது. அதனை தொடர்ந்து அவர் தந்த விளக்கம் அற்புதமாக அமைந்தது. எந்த ஒரு வார்த்தைக்கும் பல பொருள் புரிந்துக் கொள்ளலாம். ’கோ’ என்றால் அது மாடு என்றும் பொருள் தரும் அரசன் என்றும் பொருள் தரும். வீடு என்ற சொல் பின்னாட்களில் கண்டுபிடித்த சொல், ஆரம்பத்தில் கோவில் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரசன் வசிக்குமிடம் கோவில் ஆனது. அந்த காலத்தில் அரசரை தெய்வமாக கருதி வந்ததால் அரசர் வசிக்குமிடம் கோவிலானது பின்பு வேறுபடுத்த வீடு தோன்றியிருக்கலாம். மொழி என்பது காலத்தோடு வளர்ந்துக் கொண்டே உருமாறிக் கொண்டே போகும் விஷயம். ஆகையால் ‘வணக்கம்’ என்ற வார்த்தை வணங்குதலாகிவிடாது. தொழுகைக்கு நேரமாகிவிட்டது தொழுது விட்டு வருகிறேன் என்றுதானே சொல்கிறோம் மாறாக வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லையே அப்படியிருக்க ஏன் அந்த நிய்யத்தில்லாத வெறும் வார்த்தைக்கு புதிதாய் அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள். உங்களுக்கு அந்த சொல் பிடிக்கவில்லையா சொல்லாதீர்கள் ஆனால் மற்றவரையும் அப்படித்தான் இருக்க வேண்டும் நீ தவறு செய்கிறாய் என்று எந்த அளவுக்கு தவறு என்று தெரியாமலே சுட்டிக் காட்டாதீர்கள். இஸ்லாத்தை முதலில் சரியாக புரிந்துக் கொள்ளுங்கள் பிறகு வாதிடலாம் என்றார்கள். அவர் சொன்னது சத்தியமான வார்த்தையாகப்பட்டது எனக்கு. ’கடவுளின் முகவரி’ அறிந்தவருக்கு இதைக் கூட புரிய வைக்க முடியாதா என்ன?

அவரிடம் கேட்க என்னிடம் இரண்டு கேள்விகள் இருந்தது. ஒன்று இக்காலத்து பெண்ணியவாதி என்ற பெயரில் சிலரும் மற்றவர்களும் படைப்பில் நாக்கூசப்படும் சொற்களைக் கூட பாவித்து எழுதுகிறார்களே, சர்ச்சைக்குரியவர்களாகி எளிதில் பிரபலமாகும் குறுக்கு வழி கொண்டவர்களை பற்றிய அவருடைய கருத்து. இதனை வேறு விதமாக அழகாக நண்பர் ஷாஜி கேட்க, கவிக்கோ அவர்கள் அதனை எதிர்த்து வருவதாகவே சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அது நிலைக்காது என்றும் ஆருடம் சொன்னவர்களை அய்யனார் நண்பர் என்று எங்களிடம் அறிமுகமான அசோக் ’அதில் என்ன தவறு? கவிஞர் அவர்களையே கொண்டாடிக் கொள்கிறார்கள்’ அவ்வளவுதான் என்று எதிர்வாதம் செய்ய. ’கொண்டாடிக் கொள்ளட்டும் ஆனால் உடல் உறுப்புக்கு அவசியமென்ன’ என்று கவிக்கோ கேட்டதற்கு. அவர் எதை சொல்கிறார் என்று தெரிந்தும் கவிஞர்கள் எல்லா உறுப்புகளை பற்றியும்தான் பேசுகிறார்கள் எது ஆபாசமென்று யார் தீர்மானிப்பது என்று கொதித்தெழுந்தார் அவர், அதன் பின் நிலைமை சீரானது.

என்னுடைய இரண்டாவது கேள்வி, 'தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிக்கோ மற்றவர்களை விட எப்படி தனித்து நிற்கிறார்கள்’ என்பது. இந்த கேள்வியை தனியாக கேட்க வேண்டிய அவசியம் வரவில்லை. அது சொல்லாமலே எனக்கு புரிந்துவிட்டது.

இலக்கிய விழா என்றாலே இரம்பம், அறுவையாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு நாமம் போடும் வகையில் மிக சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இந்த விழா. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க கவிக்கோ தான். கேட்டுவிட்டார்களே என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல் இரசிக்கும் படியானதாகவும் அமைந்திருந்தது அவருடைய ஒவ்வொரு பதிலும். கவிதை தெரியாதவர்கள் இக்கூட்டத்ததிற்கு வந்திருந்தால் கூட கவிதைப் பற்றிய ஆர்வம் மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Monday, November 17, 2008

வாரணம் ஆயிரம் - வானிறம் ஆயிரம்

நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, நேரமில்லாதது ஒரு காரணமென்றாலும் எதையும் பதியும் படியில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம். அதுவும் எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் நாளை எதிர்பார்த்திருந்தேன். திரையரங்கில் நுழையும் போதே ஆசிப் இனிப்பு வழங்கி 'படம் குப்பையாம்; வாழ்த்துகள்!' என்று வரவேற்றார். கொஞ்சம் கல்வரமாக இருந்தது - ஆனாலும் காத்திருந்த. நம்பிக்கை வீண் போகவில்லை.

பொதுவாகவே கவுதமிடமிருந்து விறுவிறுப்பான, அதிர்ச்சிகள் அடங்கிய, திகில் நிறைந்த, புதிர் புகுத்திய படத்தைத்தான் எதிர்பார்ப்போம். இதுவோ நேர்மாறாக மெல்லிய உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கும் படமாக.

படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் காரணம் படத்தின் பெயரைத் தவிர வேற எதையும் தமிழில் பார்க்காமல் போனதாலும் கூட இருக்கலாம். சின்னச் சின்ன வசனங்களும் ஆங்கிலத்தில் வந்து எரிச்சலைக் கிளப்பியது. ஆனால் படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'கவிதை'. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப 'கதை என்ன சொல்ல வருது' என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை. நெருக்கமான தகப்பன் மகன் உறவு குறித்த ஒரு வாழ்க்கைப் பயணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


இரட்டை வேடத்தில் சூர்யா என்று தோன்றாதபடி அப்பட்டமான இரு உருவம் கொண்டவராக மாறியிருக்கிறார். முதிர்ந்த சூர்யா ஒப்பனையில் மட்டும் முதிர்ச்சியை காட்டாது தனது உடல் மொழியிலும் அற்புதமாக வித்தியாசம் காட்டியுள்ளார். மகன் சூர்யா அந்த வயதிற்கொப்ப காதல் நாயகனாக அப்பாவை தன் நாயகனாக கொண்ட அடக்கமான புதல்வன் என்ற ஒரு வேடம் மட்டுமில்லாமல் அதிலும் வயது வித்தியாசங்களை காட்ட ஒப்பனையை மட்டும் நம்பாமல் உடல் அசைவில், குறும்பு பார்வையில், இளமை துள்ளல் சொட்ட நடித்துள்ளார். அதுவும் அவர் மேகனாவை காணும் போதெல்லாம் மனதின் அதிர்வுகளை கண்களில் காட்டி அந்த இரயில் தடதடக்கும் வேளையில் ஒளித்து வைக்க முடியாமல் உடனே கொட்டிவிட வேண்டும் என்று துடிக்கும் தருணத்தில், அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து நிற்கும் போது அவரின் முகபாவங்கள் அப்பப்பா சூர்யா - 'சூர்யா' என்றாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாக்கியத்திற்கு பொருந்தும் அளவிற்கு நடிப்பை கொட்டி, வானம் பல வர்ணங்களை காட்டுவது போல் சூர்யாவும் பல்முக நடிப்பில்.

கதாநாயகி சமீரா - பார்த்தவுடன் பிடித்து போகும் முகமில்லை. ஏ.ஆர். ரஹ்மான் பாடல் கேட்க கேட்க பிடித்து போகுமே அதுபோல சமீராவின் முகமும் அந்த கதாபாத்திரத்தோடு நாம் ஒன்றும் போது பார்த்து பார்த்து பிடித்து போகிறது.

ரம்யா (திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்) கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படியாக அமைந்திருக்கிறது. அவள் காதல் தெரிவிக்கும் தருணமும் அதன் நேர்த்தியும் மிக அழகு.

நெடுங்காலமாக ஒப்பனை போட்ட முகமென்பதால் சீக்கிரமே முகச்சுருக்கம் ஏற்பட்டுவிட்டதால் சிம்ரனுக்கு வயதானவருக்கான ஒப்பனைக்கு அவசியமில்லாத அளவுக்கு கிழடுதட்டிவிட்டது. அவருடைய மலரும் நினைவுகளில் இளம் சிம்ரனாக மாற்றத்தான் ஒப்பனையாளர் கொஞ்சம் சிரமம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பாடல் வரிகள் தாமரை என்பதாலும் அதற்கு ஹாரிஸ் இசையமைத்திருப்பதாலும் கேட்வே வேண்டாம், எனக்கெல்லாம் கேட்காமலே பிடித்து போகும். அதுவும் 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' உண்மையில் மனதில் மழைத்துளி சொட்டும் பாடல்தான்.

இன்னும் முயன்றிருந்தால் நிறைய கத்திரித்திருக்கலாம். தமிழக திரையரங்கில் குழந்தை கடத்தல் விஷயத்தை மொத்தமாக கத்தரித்துவிட்டார்களாம் - அதுவும் நல்லதுதான். தேவையற்ற சாயம் பூசிய நிஜமில்லாத கதாநாயக சாகசம் இந்தப் படத்திற்கு தேவையற்றதுதான்.

படம் முழுக்க ஆங்கிலம் கதைத்துவிட்டு கடைசி காட்சியில் 'வாரணம் ஆயிரத்திற்கு' பொருள் சொல்லும் பாங்கு சிரிப்பை வரவழைத்தது.

படத்திற்கு என்னவோ என்னால் கதைச் சுருக்கம் சொல்ல முடியவில்லை - சுருக்கும் படியாக இல்லையப்பா மிக நீளப்படம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இருப்பினும் ஒரே கல்லில் இரண்டு பேரிச்சம்பழமாக (எங்க ஊர்ல மாங்காய் மரத்தை தேடணும்ங்க) சூர்யா தன் தந்தைக்கும், கவுதம் தன் தந்தைக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக அமைகிறது படம்.

இப்படி நம் தந்தை இருந்திருக்க கூடாதா என்று சிலருக்கும், என் குழந்தைக்கு இப்படி ஒரு தகப்பனாக இருப்பேன் என்று சிலருக்கும் தோன்றினாலே இயக்குனருக்கு வெற்றிதான். பார்க்க வேண்டிய படம்தான், ஒரு முறையாவது.

Sunday, August 24, 2008

இரங்கல் செய்தி

இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கண்ணதாசன், எம்.ஜி.ஆர், கலைஞர் மூவரிடமும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவர் கற்பூர நாயகியே (L.R. ஈஸ்வரி அம்மன் பாடல்) காலத்தை வென்றவன் (அடிமைப்பெண் படத்தில்) போன்ற பெருமை மிகு பாடல்களை எழுதிய கலைமாமணி கவிஞர் அவினாசிமணி இன்று 24 ஆகஸ்டு 2008 சென்னையில் காலமாகி விட்டார்கள். இவர் இயக்குனரும் நடிகருமான ஆர். பாண்டியராஜன் அவர்களின் மாமனார் ஆவார்.

அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, April 29, 2008

அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.

மயங்க வைத்த மாலை பொழுதென்று ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியாத அளவிற்கு இசை விருந்து படைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர்.

'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த சந்தோஷம் கிடைக்குமா, பொண்டாட்டி கூட வந்தா? அதான் அப்படி போல.

ஷார்ஜா கிரிக்கெட் அரங்கத்துல ஏப்ரல் 18 இசை விழா - ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், சித்ரா, சாதனா சர்கம், சிவமணின்னு இன்னும் நிறைய பெயர்கள். டிக்கெட்டில பெரிய பட்டியலை பார்த்ததுமே கண்டிப்பா போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அதற்கேத்தா மாதிரி அக்காவும் 2 வி.ஐ.பி. டிக்கெட் தந்தாங்க. 'உனக்கு ஏ.ஆர்.ஆர். பிடிக்குமே போயிட்டு வா'ன்னு. என்ன ஒரு நல்ல மனசு பாருங்க. சரி, நம்ம கதைய விடுங்க. நிகழ்ச்சி 8.30 மணிக்குன்னு போட்டிருந்தா மாதிரி சரியா நேரத்திற்கு ஆரம்பிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. உள்ளே நுழையுறோம் ஏ.ஆர். ரஹ்மான் முதல் பாடலை தொடங்கிட்டார் 'கல்பலி ஹெய் கல்பலி'ன்னு 'ரங் தே பாசந்தி' படத்திலிருந்து. 'முதல் பாட்டு தமிழில் இருக்கும்னுல நினைச்சேன்னு' நான் முணுமுணுத்துக்கிட்டே உட்கார்ந்தேன்.


அடுத்த பாட்டே 'காதல் ரோஜா'வே ஹரிஹரன் குரலில். நான் சொன்னது கேட்டுடுச்சோன்னு பார்த்தா அந்த ஒரு பாட்டு மட்டுமில்ல. ஒரு ஹிந்தி, ஒரு தமிழ்ன்னு மாத்தி மாத்தி பாடி எல்லா வகையான இரசிகர்களையும் போட்டு இழுத்துட்டாங்க. 'என்னதான் சொல்லுங்க காதல் ரோஜாவே நம்ம எஸ்.பி.பி. குரலில் கேட்ட மாதிரி இல்ல ஹரிஹரன் தேவையில்லாம மெட்ட மாத்தி பாடி சொதப்புறார்'ன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்திலிருந்து என்ன வேண்டா வெறுப்பா கூட்டிப் போனவர் 'ஹரிஹரன் எவ்வளவு பெரிய பாடகர், நீ பெரிய இவளா, அவர போய் சொதப்பல்னு சொல்றீயே'ன்னு சொன்னதும் நான் கப்சிப்ன்னு ஆகிட்டேன். அதன் பிறகு வந்த 'பூம்பாவாய் ஆம்பல்' ஹரிஹரன் - மதுஸ்ரீ பாடினார்கள். மதுஸ்ரீயை இரசிக்கும் அளவுக்கு ஹரிஹரனை இரசிக்க முடியவில்லை. மேடை பாடல்கள் என்றால் வித்தியாசம் காட்டுவதற்காக ராகம் மாற்றி பாடுவது, வரியை விட்டு பாடுவதெல்லாம் எஸ்.பி.பி. ஸ்டைல். அவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதாக மண்டையில் ஏறிடுச்சு போல அதனால் இவர் செய்தால் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஹரிஹரனும் சாதனாவும் சேர்ந்து பாடிய பாடலில் என்ன படமென்று தெரியவில்லை கவாலி பாடல் போல் இருந்தது, பாடலின் முடிவில் இருவரும் மாற்றி மாற்றி அந்த ஸ்வர வரிசைகளை வேகமாகப் பாட என்னை அறியாமல் கைத்தட்டவே தோன்றியது.

'நன்னாரே நன்னாரே'ன்னு 'குரு'வின் பாடலோடு இளமை துள்ள நீத்தி மோகன் ஆடத் தொடங்கியதும் பார்வையாளர்கள் கூட்டமும் ஆடத் தொடங்கிவிட்டது. அந்தப் பாட்டுக்கு மட்டுமல்லாமல் பாடிக்கிட்டே இருந்தா அலுப்பு தட்டிடும் என்பதற்காகவே நடன அமைப்புகளும் நிறைய பாட்டுக்கு அமைத்திருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகளாக இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப அழகா ஆடினாங்க. ஆடை அலங்காரமும் அற்புதமா இருந்துச்சு. நிழற்பட கருவி அனுமதியில்லன்னு சொன்னதால படம் எடுத்து தள்ள முடியல.

அடுத்து வரும் பாட்டு தமிழிலா ஹிந்தியிலான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது, ஒரு கிட்டார் ஸ்கோர் கொடுத்து என்ன பாட்டு என்று குழம்ப வைத்து யாரோ சின்ன பையன் மாதிரி வந்து தேனான குரலில் 'எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா'ன்னு சொன்னதும் தமிழ் தெரியாத அம்மணிகளும் எழுந்து குதித்தார்கள். யாருடா அந்த பையன்னு பார்த்தா கார்த்திக். அதில் நடுவில் வரும் 'வஹுவஹுவாஹா' ன்னு வருவதையும் பெண் குரலில் அமைவதாக பாடி கலக்கினார்.

தமிழ் பாட்டு பாடினா அது ஹிந்தியிலும் வந்திருந்தா தமிழோடு கடைசி பத்திய ஹிந்தில முடிக்கிறாங்க. ஆனால் ஹிந்தி பாட்டு பாடும் போது அது தமிழிலும் வந்திருந்தா தமிழை தொட்டு முடிக்கலைன்னு நான் புலம்பியவுடன், ஹிந்தில பாடிக்கிட்டு இருந்த மதுஸ்ரீ அதே பாட்ட டக்குன்னு தமிழில் 'கோழி கோழி இது சண்ட கோழி'ன்னு' என்னை பார்த்து பாடுறா மாதிரி இருந்தது. குரலிலே என்னமா ஒரு கிக் வச்சிருக்காங்க இவங்க.

அவங்க மட்டுமா சின்ன குயில் சித்ரா, அவங்க மேடைக்கு வந்ததும் என்ன ஒரு கர கோஷம். 'குமுசுமு குமுசுமு குப்புசே'ன்னு கோரஸ் தொடங்கியது அப்படியே கைத்தட்டு பிச்சிக்கிட்டு போச்சு. அப்படியே குயிலும் 'கண்ணாளனே எனது கண்ணை'ன்னு பம்பாயிலிருந்து அவிழ்த்துவிட அரங்கமெங்கும் உற்சாக ஒலிதான். தமிழில் மட்டுமா பாடுவேன் ஹிந்தியிலும்தான் பாடுவேன் என்பதாக 'ஜெயியா ஜலே'ன்னு லதா மங்கேஷ்கர் பாடிய தில் சே படத்து பாடலை யாருக்கும் சளைத்தவள் இல்லை என்பவராக ரொம்ப ரம்யமாக பாடினாங்க. அவங்க பாடி முடிச்சதும் அதே படத்திலுள்ள 'தில் சே' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாட பின் அசைவாக தீ டிஜிடல் கிராபிக்ஸில் நடனமாடியது. அதே மாதிரி 'அதிரடிக்காரன் மச்சான் - தீ தீ' என்ற சிவாஜி படப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் குரல் கணீரென்று ஒலிக்க எல்லா பாடகர்களும் மேடையில் அவருடன் கோரஸ். உண்மையில் அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.தான்.

சமீபத்தில் வந்த 'ஜோதா அக்பர்' படத்திலிருந்து 2-3 பாடல்கள். 'ஜஷ்-இ-பஹாரா' பாடலை மனம் ஒன்றி, என்ன அர்த்தமென்று புரியாத என்னை போன்றவர்களையும் அந்த பாட்டோடு ஒன்ற செய்தவர் ஜாவித் அலி. அழகா அடக்கமா அலட்டாமல் அற்புதமா பாடினார். ரொம்ப 'ஸ்மார்ட்'டாக வேற இருந்தார். சில பாடல்கள் புரியாமலே நம்மை சிலிர்க்க வைக்கவும், குரல் அடைத்து கண்ணில் தண்ணீர் வரவும் வைக்கும் - அப்படி நீங்கள் உணர்ந்ததுண்டா? சில தருணங்களில் சில பாடல்கள் அப்படி என்னை செய்ததுண்டு. அப்படியொரு பாடல்தான் அதே படத்தின் 'கவாஜா மேரே கவாஜா'
கசல் பாடல். ஏ.ஆர். ரஹ்மான் நம்மவர்கள் தொழும் போது தலையில் கைக்குட்டை கட்டிக் கொள்வார்களே அப்படி கட்டிக் கொண்டு ஈடுபாடோ பயபக்தியாக பாடினார். அப்போதும் அருகில் அவருடன் இணைந்து பாடியதும் ஜாவித்தான்.

'ஜலாலுதீன் அக்பர்...' என்று ஏ.ஆர். ரஹ்மான் குரல் ஓங்கி ஒலிக்க 'டிரம்ஸ்' வேகமாக வீசி தள்ளி தொடர்ந்தாற் போல் 'வீர பாண்டி கோட்டையிலே' தட்டி, கிடைக்கும் அன்றாட பொருட்களிலும் மயங்க வைக்கும் மந்திர இசை ஓசை வருமென்று விளங்க வைக்க தண்ணீர் பாட்டில், பெட்டி என்று எல்லாவற்றையும் தட்டி இசை உண்டாக்கினார் சிவமணி. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக. பிரம்மிக்க வைத்தது அவர் அளவற்ற இசை ஆர்வம், திகைக்க வைத்தது அவர் இன்ப இசை அதிர்வுகள், கை வலிக்கப் போகுதுன்னு நினைக்கும் அளவிற்கு மனுஷர் தட்டி உலுக்கிவிட்டார் - பார்வையாளர்கள் மனசையும் சேர்த்து. என்னமா வாசிக்கிறார். அவர் எதை எப்படி தட்டினாலும் இசை. அவர் டிரம்ஸுக்கு மட்டுமே எத்தனை ஒலிவாங்கிகள். மெல்லிய சத்தத்தையும் மனதிற்கு எடுத்து செல்லவாகவிருக்கும். அதே போல் புல்லாங்குழலை ஊதி காற்றில் கீதம் கலந்தார் நபீல். முன்பெல்லாம் டிரம்ஸ் யார், புல்லாங்குழல் யார் என்றெல்லாம் தெரியப்படுத்தக் கூட மாட்டார்கள். இசை கூட்டணியின் விதைகளை விருச்சமாக நமக்கு காட்டியது ஏ.ஆர். ரஹ்மான் என்றால் மிகையில்லை. திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிவமணி போன்றவர்களை தம் நிகழ்ச்சியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

பிளேஸ் 'ஒரு கூடை சன் லைட்' என்று பாடிவிட்டு இரண்டாவது முறை பாடும் போது பார்வையாளர்களிடம் வாத்தியார் கோடிட்ட இடங்களை நிரப்பச் சொல்வது போல் 'ஒரு கூடை .....' என்று கேட்க - எல்லோரும் ஒருமித்த குரலில் 'சன் லைட்' என்று கத்த அவரே தொடர்ந்து எல்லா வாத்தியக்காரர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். அதில் நினைவிருப்பது கல்யாண் -வயலின், சிவகுமார் -மியூசிக் சீக்குவன்ஸ், ரவிசங்கர் -கீபோர்ட், தாஸ் தாமஸ் -சாக்ஸ் அப்படின்னு நினைக்கிறேன். அதனைத் தொடர்ந்து அனைவரையும் செல்பேசியின் வெளிச்சத்தை தூக்கிக் காட்ட சொல்லி வழக்கமான பாடல்கள் பாடாமல் ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி அவர் சமீபத்தில் இசையமைத்த சேகர் கபூரின் எலிசபெத் (The Golden Age and the stage adaptation of The Lord of the Rings) 'பிரே பார் மீ பிரதர்ஸ், பிரே பார் மீ சிஸ்டர்ஸ்' (Pray For Me Brothers Pray for me sisters) என்று பிளேஸுடன் இணைந்து உருகிப் பாடி நம்மையும் கலங்கச் செய்து நிஜமாகவே ஒரு சகோதரனின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளச் செய்தது அந்த ஆங்கில பாடல்.

ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதே இந்தப் பாட்டுத்தான்னு ஊகித்து மக்கள் கைத்தட்டி வரவேற்க, பாடுபவர்களும் உற்சாகம் குறையாமல் அதுவும் நம்ம நரேஷ் 'ரூபாரூ'ன்னு வந்தாரு பாருங்க. யப்பா அதுக்கு கருப்பு ஆடையில வந்த பசங்களும் கலக்கலா ஆடினாங்க. ரங் தே பாசந்தி பட காட்சியவிட இது பிரமாதம்னு சொல்ல தோணுச்சு.

* வழக்கமான பாடல்களா இல்லாம புதுசு தரனும்னே குரு, ஜோதா அக்பர், சிவாஜி, அழகிய தமிழ் மகன்னு வந்த புதுப் படங்களிலிருந்து பாடல் தர தவறவே இல்ல.
* இடை இடையே அறிவிப்பாளர் பேசி அறுக்காமல், வித்தியாசமாக ஒரு நிமிஷம் கூட வீணடிக்காம தொடர்ச்சியா பாடல் குவிந்தது.
* பின்புறம் பாடலுக்கேற்ப டிஜிடல் கிராபிக்ஸ் ஸ்கிரீன், வண்ணமயமான விளக்குகள், அருமையான ஒலியமைப்பு எல்லாமே கண் கொட்டாம பார்க்க செய்தது.
* நிகழ்ச்சியின் பலம் எல்லா பாடல்களுக்குமே ஏ.ஆர்.ஆர். கூடவே இருந்து தமது கீ போட்டை தட்டிக் கொண்டிருந்தது.
* டிஜிடல் ஸ்க்ரீன் பிரம்மாண்டமாக வைத்ததால் காலரியில் இருப்பவர்களும் கொடுத்த 125 திர்ஹமுக்கு நிறையவே இரசித்து மகிழ முடிந்திருக்கும்.

நாங்க 11.30 மணிக்கே கிளம்ப வேண்டியிருந்ததால கடைசி பாடலான 'வந்தே மாதிர'த்தைக் கேட்க முடியவில்லை. வெளியில் வந்தால் டிக்கெட் யாராவது தரமாட்டார்களான்னு ஒரு கூட்டமே காத்துக் கிடந்தது. உபயோகித்த டிக்கெட்டை கொண்டு மறுபடியும் உள்நுழைய முடியும் போல அதனால் அதையும் கொடுத்து. டிக்கெட் காட்டினால் கையில் ஒரு வலையம் கட்டிவிட்டார்கள். அதையும் கழட்டிதாங்கன்னு கெஞ்சிக்கிட்டே வந்தார் ஒருத்தர். சரின்னு அதையும் கொடுத்துவிட்டு வந்தோம்.

இதே போன்ற ஒரு ஏ.ஆர்.ஆர். நிகழ்ச்சி சென்னையில் 20ஆம் தேதி கலகலத்ததாமே அதற்கு யாராவது போனீங்களா?

இந்தக் காலத்துல நிறைய பாடகர்கள் குவியுறாங்க ஆனால் அதிர்ஷ்டம்னு ஒண்ணு கூட இருந்தாதான் பலர் காதுகளில் அவர்கள் குரல் ஒலிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு பல புது பாடகர்களை துறைக்கு அழைத்து வந்திருக்கிறார். 'சலாம் நமஸ்தே' நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே அவர்கள் எஸ்.பி.பி., யேசுதாஸ் இவர்களெல்லாம் ஹிந்தி பாடும் போது 'ஹிந்தி என்னா பாடுபடப் போகுது'ன்னு நினைச்சாங்களாம். ஆனா அந்த அளவுக்கு உடையல நல்லாவே உச்சரிக்கிறாங்கன்னு குறிப்பா சொன்னாங்க. ஆனா தமிழில் அதப்பத்தி யாருமே கவலைப்படுறதில்ல. ஏ.ஆர்.ஆர். கிட்ட எனக்குப் பிடிக்காதது தமிழ் தெரியாத பாடகர்களை தமிழ்க் கொலை செய்வதற்காகவே அழைத்து வந்து நல்ல வரி பாடல்களை கொலை செய்வதுதான். பாட்டு எழுதுபவர்கள் என் பாட்டை 'உதித்' மாதிரி ஆட்கள் கொலை செய்ய வேணாம்னு சொல்ல முடியாதுதான். ஆனால் ரஜினி மாதிரி கதாநாயகர்களாவது 'சஹானா சாரல்' போன்ற அழகிய பாடல்களை ஹிந்திக்காரர்கள் உச்சரிப்பு சிதைக்குதுன்னு சொன்னாத்தான் என்ன? ரஜினி மாதிரி கதாநாயகர்கள் தமிழ் உச்சரிப்பு சிதைவதைப் பற்றிப் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள். யப்பா, நான் ரஜினியை கிண்டல் செய்யலப்பா அவர் சூப்பர் ஸ்டார் என்பதாலே அவர் எப்படி வேணாலும் பேசலாம்.

Friday, February 01, 2008

நாடகமே உலகம்

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

Saturday, January 19, 2008

பீமா - அப்படியொண்ணும் மோசமில்லை

'ஒருவன் தன் பாதையை தேர்ந்தெடுக்கும் போதே அவனது முடிவு எழுதப்பட்டுவிடுகிறது' என்ற முடிவை நோக்கி நகர்வது 'பீமா'. ஆயுதத்திற்கு நண்பர்- பகைவர், நல்லது- கெட்டது என்று எதுவுமே தெரியாமல் 'என் கடன் பணி செய்துக் கிடப்பதே' என்று தன் அழிக்கும் பணியை ஆயுதம் செய்தே விடுகிறது என்று உணர்த்தும் படம். கதாநாயகனின் பெயர்தான் பீமா என்று நினைத்திருந்தேன் ஆனால் விக்ரமிற்கு மகாபாரதத்தில் வரும் பீமனின் தோற்ற அடிப்படை தருவதால் சேகர் 'பீமா'வாகிறார். எதையுமே புதுசாக சொல்ல முயற்சிக்காத, ஏற்கெனவே பார்த்த பல படங்களின் சாயல். ஒட்டுமொத்த 'ரவுடியிஸ' படங்களின் கலவைன்னு சுருக்கமா சொல்லிடலாம். இயக்குனர் லிங்குசாமியின் 'சண்டைகோழி', 'ரன்' வரிசையில் மற்றுமொரு அடிதடி படம் அவ்வளவே. கொஞ்சம் 'தளபதி' சாயலை தொட முயற்சித்திருக்கிறார்கள் என்று நான் கிசுகிசுக்க, "ச்சீ ச்சீ இல்லவே இல்ல" என்று ஒரு விக்ரம் ரசிகர் பதிலளித்தார் படத்தை சிலாகித்தபடி.

சென்னையைப் பற்றிய ஒரு முகவுரையோடு படம் ஆரம்பிக்கும் போது பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பெரிய ஏமாற்றங்கள் இல்லையெனலாம். என்னவொரு முரணான வாக்கியமென்று நீங்கள் நினைக்கலாம். எழுதிய எனக்கும் அப்படித்தான். பூசிமெழுகும் காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன். பீமா கதாபாத்திரத்திற்கு விக்ரம் சரியானவர்தான். படத்தில் மிகப் பெரிய ஆறுதல் எந்த 'பஞ்ச்' வசனங்களுமில்லை. கதாநாயகன் என்று எந்த 'பில்டப்'பும் இல்லாமல் சாதாரணமாகப் படத்தில் நுழையும் விக்ரம், ஒரே நபர் பலரைச் சுற்றிச் சுற்றி அடிப்பது எரிச்சலைத் தந்தாலும் சண்டை போடுவது 'பீமா' விக்ரம் 'சுள்ளான்' இல்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். படத்தை வண்ணமயமாக மாற்ற ஆங்காங்கே ஒரு பெண்ணைக் கொண்டு நிரப்பும் தமிழ்த்திரை உலகிற்கு இந்தப் படம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? அதனால் திரிஷா அப்பப்ப எட்டிப்பார்க்கிறார். ஒரு அடிதடி மன்னனைக் காதலிக்கும் கல்லூரி மாணவியின் 'டிரெண்ட்' எப்பதான் மாறுமோ தெரியவில்லை. பார்த்தவுடன் காதல் என்ற கண்றாவி வேறு - பரவாயில்லை ஏ.எம். ரத்தினத்திற்காக சகித்துக் கொள்ளலாம். பிரகாஷ்ராஜ் வழமையான கதாபாத்திரமாக வராமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதால் நல்லாவே பொருந்தியிருக்கிறார். சுஜாதாவின் வசனமாக இருந்தாலும் எந்த அசிங்கமான இரட்டை வசனங்களுமில்லை - ஒருவேளை எனக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை. எனக்கு ஏனோ ரகுவரனை பார்த்தால் சுஜாதாவைப் பார்ப்பதாகத் தோன்றியது - மிகப் பரிதாபமான கதாபாத்திரம். என் மகள் கண்களுக்கு ரகுவரன் தோற்றம் எப்போதும் ஷாருக்கானாகவே தெரியும் - இதை ஷாருக்கான் கேட்டால் அழுதுவிடுவார். விக்ரம் படமென்றால் ஆஷிஷ் வித்யார்த்தி தொற்றிக் கொள்வாரோ? கமிஷனராக சில காட்சிகள் வந்தாலும் அவர் நுழைந்த பிறகுதான் 'டுமீல்' சத்தம் அதிகரிக்கிறது.

படத்தின் ஒலிநாடா ரொம்ப காலத்திற்கு முன்பே வந்துவிட்டதால் கேட்டு அலுத்துப் போன நல்ல பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜ் நல்லாவே தட்டியிருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகள் மெனக்கெட்டு வேறு நாட்டில் தேவையில்லாமல் படமாக்கி ஏம். ரத்தினத்திற்கு செலவு வைத்திருக்கிறார்கள் தவிர பிரம்மாண்டமெல்லாமில்லை. சில படங்களில் கதாநாயகியாக வலம் வந்த ஷெரின் பாவம் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு மட்டும். ஒவ்வொரு பாடல் வரும் போதும் எனக்குப் பிடித்த 'எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்' என்ற யுகபாரதியின் வரிகள் சாதனாசர்கம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலை தேடிக் கொண்டே இருந்தேன். வந்தது கடைசியாக, எதிர்பார்ப்பை தகர்த்து.

இந்தக் குழுவிடம் வேற என்ன புதுமையை எதிர்பார்க்கச் சொல்றீங்க? ஒரு சண்டை, ஒரு பாடல் கொஞ்சம் வசனமென்று மாறி மாறி சரியான தமிழ் மசாலா படங்களில் ஒன்று. பொழுதை மட்டும் போக்க, மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி. விறுவிறுப்பான 'போர்' அடிக்காத படம். என்ன, திரைகதையை சொதப்பியிருக்கிறார் லிங்குசாமி. போகட்டும் அதையும் பொறுத்துப் போகலாம்- யாருக்காக எல்லாம் ஏ.எம். ரத்தினத்திற்காக. விக்ரம், லிங்குசாமி தங்கள் சம்பளத்தையே விட்டுக் கொடுத்து வெளிவந்துள்ளது 'பீமா'. 'இந்தியன்', 'தூள்', 'கில்லி' என்று தூள் படுத்திக் கொண்டிருந்த ரத்தினம் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தால் விழுந்த அடி இந்த அடிதடி படத்தில் மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் ஜீவி நிலை வந்துவிடும் அபாயமுள்ளது. அவர் வறுமையை ஈடுகட்டவாவது படம் 'ஆஹா ஓஹோ' என்று ஓட வேண்டும். 'சந்திரமுகி', 'சிவாஜி', 'பில்லா' என்ற படங்களையே பெரிய அளவில் ஓட வைத்த நம் மக்கள் இதைச் செய்துவிட மாட்டார்களா என்ன? 'பீமா' படத்தில் 'சுப' முடிவு இல்லாததை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்த முடிவுதாம்பா சரி. ஓடாதோன்னு பயந்து இன்னொரு முடிவை ஒட்டவைத்தால் அபத்தமாகிப் போகும். மொத்த படமே அபத்தம் இதுல தனியா இதுவேறயான்னு கேட்காதீங்க நான் ஜூட். ஆனா மறக்காம படத்தை திரையரங்கில் பார்த்துடுங்க.

Sunday, January 13, 2008

PIT: டிசம்பர் மாதப் போட்டிக்கான படங்கள்

என்னடா முடிந்துப் போனப் போட்டிக்கு தாமதமா பூக்கள் படம் இப்போ வருதுன்னு தவறா நினைக்க வேணாம். பரிசு பெற்ற பூப்படத்தைக் காட்டிலும் இது ரொம்பவே அழகா இருந்ததா தோணுச்சு அதான் போட்டுட்டேன். பரிசு கொடுப்பாங்களா :-)



எப்பா கோபப்படாதீங்க, இது கண்மணி மொக்கைப் போட அழைத்தமையால் நிகழ்ந்தது. கண்டிப்பா நிஜமாவே ஜனவரி மாதப் போட்டிக்கு ஒரு நல்ல படத்தோடு வரேன். மொக்கைப் போட நான் வெத்தலை பாக்கெல்லாம் வச்சி யாரையும் அழைக்கப் போவதில்லை, அனானிகளை மட்டும் அழைக்கிறேன். அனானிகள் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மொக்கையாக உங்க வலையை தொடங்கி அதிலிருந்து இனி பின்னூட்டமிடலாம்.

Saturday, January 05, 2008

இதப் பார்த்தாவது திருந்துவாங்களா?

குறும்படமென்றாலே எனக்கு தரமணி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணி புரியும் போது என் சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான 'சும்மா', பள்ளி படிப்பின் பாரத்தை பற்றிய 'இந்த பாரம் தேவையா' போன்ற கருத்தாழமிக்க படங்கள்தான் நினைவுக்கு வரும். பல மாதங்களுக்கு முன்பு தமிழனில் ஒளிபரப்பிய குறும்படம் பற்றிய கருத்தரங்கம் மீண்டும் குறும்படங்கள் மீது ஆர்வம் வர ஒரு உந்துதலாகயிருந்து, அந்த கருந்தரங்கில் பேசப்பட்ட சில படங்களை இணையத்தில் தேடிப்பிடித்து பார்த்தேன். 'மனுஷி', 'தனியொரு மனிதனுக்கு', 'குப்பை', 'இளைஞா', 'ஒரு மரம் நிழலை தேடுகிறது', 'உயிரே உயிரே', 'செருப்பு', இன்னும் பல கிடைத்தது.

குறும்படம் ஏறத்தாழ ஒரு நல்ல கவிதை வடிவம் பொருந்தியது, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு அதனை அழுத்தமாக விளங்கச் செய்து நம்மை வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் வல்லமைக் கொண்டது, சிலது விழிப்புணர்வூட்டும், சிலது மனிதத்தைத் தோண்டும். நான் பார்த்த அந்த தொலைக்காட்சி கருத்தரங்கில் குறும்படம் எடுத்தவர்களின் அனுபவங்களின் பகிர்வு, அவரவர்களுக்கு பிடித்த குறும்படத்தை பற்றிய விவரிப்பு, விளம்பரப் படத்திற்கும் குறும்படத்திற்கும் உள்ள வேறுபாடு, குறும்படத்தைக் கையாளும் யுக்தி என்று சில பிரபலங்களால் விவாதிக்கப்பட்டது. அதில் 'விஷுவல் மீடியா' படிக்கும் ஒரு மாணவரும் அடக்கம். தமது படிப்பிற்கு இத்தகைய படங்கள் எங்ஙனம் உதவுகிறது என்றும் விளக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவாளர்களுக்காக மலைநாடன் நடத்திய குறும்படப் போட்டியில் எம் வலைப்பதிவர்களும் உற்சாகமாக கலந்துக் கொண்டு பரிசுப் பெற்றது பெருமைக்குரிய விஷயமாகப்பட்டது. பாலபாரதி தனது செல்பேசியிலேயே எடுத்து ஒலி சேர்த்திருந்த திறனும் அவர் கையாண்டிருந்த தலைப்பும் பிரமிக்க வைத்தது. அவரைப் போல பல பதிவர்கள். சமீபத்தில் மங்கையின் குறும்படம் பற்றிய பதிவும் மகிழ்ச்சியளித்தது. குறும்படம் பற்றி பேச, ஒரு பதிவாக எழுத துளிர் விடச்செய்தது இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்' தான் என்று சொல்லலாம்.


தனது வலைப்பூவை வடிகாலென்று பலர் சொல்லிக் கொண்டாலும் பின்னூட்டத்தின் எண்ணிக்கையில் பதிவின் எடையை நிறுத்திப் பார்க்கும் பலருக்கு மத்தியில் பின்னூட்ட பெட்டியே இல்லாமல் உண்மையிலேயே வலைப்பூவை வடிகாலாக வகுத்துக் கொண்ட இசாக்கை நமக்கெல்லாம் ஒரு சக பதிவராக நல்ல கவிஞராக தெரியும் ஆனால் குறும்படம் எடுக்கக் கூடிய ஆவலை தேக்கி வைத்து ஒரு நல்ல படத்தை தரக்கூடியவர் என்று நேற்று அந்த படத்தை வெளியிட்டு திரையிடும் வரையில் தெரிந்திருக்கவில்லை எனக்கு.

அமீரகத்தில் வாழும் ஒவ்வொருவரும் விடுமுறையை எதிர்நோக்கி வருடம் முழுவதும் உழைக்க, கிடைத்த ஒரு மாத விடுமுறை இடைவேளையையும் இதற்காக பயன்படுத்திய அவரைப் பாராட்டும் முன்பு அதனைப் பொறுத்தருளிய அவர் மனைவிக்குத்தான் பாராட்டுகள் அனைத்தும். கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இசாக்குக்கு சேர வேண்டிய பாராட்டை முழுவதுமாக அவர் மனைவிக்கு தந்தமைக்கு காரணமில்லாமலில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் மனதிற்கேற்ப சிறந்த படைப்பைத் தர தனது துணை அந்த படைப்பில் பங்குபெற வேண்டுமென்று அவசியமில்லை தேவையான மனநிம்மதியும் அவருக்கு பக்கபலமான இடையூறில்லாத வார்த்தையும்தான் அவரை உயரத்திற்கே அழைத்து செல்லும். அந்த வகையில் இசாக் அதிர்ஷ்டசாலிதான்.

பத்து நிமிடத்தில் தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாக பதித்திருக்கிறார் - காட்சியாக மட்டுமில்லை நம் மனதிலும். ஒரு குடியின் பயணமென்றதும் பலரும் ஒரு குடிகாரன் குடித்தே தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு படத்தை எதிர்பார்ப்பார்கள். அப்படியில்லாமல் ஒரு குடிகாரனால் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பாதிப்பை அழகாக வடித்துள்ளார். குடியைவிட அந்த படத்தில் எனக்கு அதிகம் தென்பட்டது ஒரு பெண்ணின் அறியாமைதான். எப்படி ஒரு பெண் தன் கணவனைச் சார்ந்தவளாக இருப்பின் அவனுடைய குடியையும் தாங்கிக் கொண்டு தன் வாழ்வின் அர்த்தமாகக் கருதும் தன் குழந்தையையும் இழக்கிறாள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. குடிகார கணவனால் குழந்தையை இழந்த தருணத்தில் அவனை உதாசீனப்படுத்துவதற்கு பதிலாக, குடி வீட்டில் குடிபுகுந்தவுடன் அவள் அவனை அலட்சியப்படுத்தினாலே குடி எந்தக் குடியையும் கெடுத்துவிட முடியாது. இந்த படத்தைப் பார்க்கும் ஒரு குடிகாரனுக்கு தாக்கம் ஏற்படுமோ இல்லையோ குடிகாரர்களின் மனைவிமார்கள் அந்தப் பெண்மணியின் அழுகையின் ஓலத்தைக் காதில் வாங்கும் போது கண்டிப்பாக தனக்கும் இப்படியொரு கதி ஏற்படுமோ என்று ஈரக்குலை நடுங்கத்தான் செய்வார்கள். அதற்காகவாவது இந்தப் படத்தை அமீரகத்தில் வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் இசாக்.

அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் திரையிடவும் கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அமீரகத்தில் மக்கள் குடிப்பார்கள். ஆனால் குடிகாரனாக குடியையே மறப்பவர்கள் அமீரகத்தில் சொற்பமென்பதால் அதனை இங்கு திரையிடுவதற்கு மாறாக தமிழகத்திலென்று மட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் சமூகவியல், 'விஷுவல் கம்யூனிகேஷன்', 'மாஸ்மீடியா' துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு காண்பித்து அவர்கள் நடத்தும் கிராமப்புற பட்டறைகளிலும், நகர்புற சேவைகளிலும் போட்டுக் காண்பிப்பதோடு நிறுத்திவிடாமல் என்ன புரிந்தது என்று அவர்களுக்கிடையே கருத்து பரிமாற்றம் நடத்தி விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அந்தப் படத்தை பார்க்கும் போது ஒரு இயக்குனராக நடித்த கதாபாத்திரத்திலிருந்து தேவையான திருப்தியான உணர்வுப்பூர்வமான நடிப்பை, சரியான முகபாவத்தை கரக்கவில்லையென்ற குறைபாடு இருந்த போதும் கூட அதனைப் பின்னணி குரல்களும் காட்சியமைப்புகளும் ஒவ்வொரு நகர்வுகளும் திருப்தியளித்து ஈடுகட்டுவதாக இருந்தது. அவர் பேசும் போதுதான் ஒரு பத்து நிமிட படத்திலும் இருக்கும் சிரமத்தை, கட்டுப்பாட்டை உணர முடிந்தது. பத்து நிமிட படத்திற்கே இப்படியென்றால் ஒரு முழு நீளப்படத்தையெடுக்க எவ்வளவு மேடு பள்ளங்கள் கடக்க வேண்டியிருக்கும்!?

பலகோடி மணிநேரங்கள், கோடிக் கணக்கில் பணமென்று செலவிடும் வீணாப்போன இயக்குனர்கள் கிடைத்த வாய்ப்பை ஒரு நல்ல படம் தர முயற்சிக்காமல் வியாபார மயமாக்கல் என்று மட்டும் மனதில் விதைத்துக் கொண்டு உருப்படாமல் ஒரு படம் தருவதற்கு பதிலாக இப்படிப்பட்ட நல்ல குறும்பட இயக்குனர்களைக் கொண்டு பல குறும்படங்களை தந்தால்தான் என்ன?

Friday, December 28, 2007

'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு


'தாரே ஜமீன் பர்' படம் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமலிருக்கிறேன். அய்யனார், குசும்பர், பெனாத்தலார், ஆசிப் என்று பலரும் எழுதிவிட்ட பிறகும், அந்த படத்தை பற்றி எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் விமர்சிக்க வார்த்தையில்லை என்றுதான் சொல்ல வேண்டும், குறிப்பாக தர்ஷீலின் நடிப்பு குறித்து சொல்லும் போது. என்னைக் கேட்டால் கண்டிப்பாக தர்ஷீல் நடிக்கவில்லை அந்த கதாபார்த்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லுவேன். கான்களையும் கப்பூர்களையும் பச்சன்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுட்டித்தனம், பிடிவாதம், மகிழ்ச்சி, பயம், அழுகை, தயக்கம், ஏக்கம், கோபம், வெறுமை என்று எல்லாவித உணர்வுகளையும் கண்களிலேயே காட்டிவிடும் அசாத்திய நடிப்பு திறமைப் படைத்தவர். கடைசிக் காட்சியில் ஆசிரியரை மிஞ்சிய மாணவனாக மட்டுமல்ல நடிப்பிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்ட குட்டி கதாநாயகன் - நிஜ நாயகன் தர்ஷீல். படத்தை பார்க்கும் போது என்னுடைய தம்பிதான் என் நினைவுக்கு வந்தான். அப்படி இருப்பதற்கு Dyslexia என்று பெயரென்றெல்லாம் தெரியாமலேயே இருந்து விட்டோம். ஒரு நல்ல ஆசிரியையாக இராம் ஷங்கர் நிக்கும்பாக அவனை மாற்றியெடுத்த பெருமை என் அக்காவையே சேரும்.

ஆமீர் கானின் தயாரிப்பு இயக்கமாக இருந்தாலும் பாராட்டுகள் போய் சேர வேண்டிய இடம் அதன் மூலக் காரணமான அமுல் குப்த்தை. தர்ஷீலை நமக்கு கண்டுபிடித்து தந்த பெருமையும் இவரையே சாரும் என்று பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார் ஆமீர் கான். படத்தில் பாடல் காட்சிகள் வெறும் காட்சிகளாக இல்லாமல் நம் மனதை வாட்டியெடுக்கும் விந்தையாகிறது. விந்தையின் வித்வான்கள் வித்தகர்கள் இசையமைப்பாளர் ஷங்கர் எஹ்சான் ராய்யும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரரான பிரசுன் ஜோஷியும். படத்தின் முதல் பாடலான 'தாரே ஜமீன் பர்' மெல்லிய இசையில் ஓங்கி ஒலிக்கும் சங்கர் மகாதேவன் குரல் முதலில் கேட்கும் போது அத்தனை வலுவாக சென்றடையவில்லை, காரணம் காட்சியில் காட்டப்படும் குழந்தைகளின் முகங்களும், அசைவுகளும், சேஷ்ட்டைகளும் இரசிக்க வைத்ததோடு, படத்தை எதிர்நோக்கி உட்கார்ந்திருந்ததாலும் கூட இருக்கலாம். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு மறுபடியும் ஒலிநாடாவில் கேட்கும் போது உலுக்கியெடுக்கவே செய்கிறது பாடலின் வரிகள்.

Dekho inhein yeh hain oss ki boodein
Patto ki good mein aasaman se khude
Angdai le phir karwat badal kar
Nazauk se moti hasde phishal kar
Kho na jaye yehh
Taaare Zaaame per


'வானத்திலிருந்து இலைகளின் மடியில் குதித்த பனித்துளிகள், சோம்பல் முறித்தெழுந்து துயில் கலையும் மிருதுவான முத்துச் சிரிப்பைக் கொண்ட தரைவாழ் நட்சத்திரங்களை கைநழுவவிடாதீர்கள்' என்று நான் பொருள் கொண்டது சரியாயென்று தெரியவில்லை. இப்படி இயற்கையோடு குழந்தையை ஒப்பிட்டு சிலாகிக்கும் அந்த பாடலின் வரிகள் அற்புதம்.

கடைசி பாடலான 'கோலோ கோலோ' ஆசிரியர் மாணவருக்கு தரும் உற்சாகமாக, தன்னம்பிக்கை தரும் சொற்களாக, புது தெம்பாகிறது. அதில் கம்பீரமாக ஒலிக்கும் 'Tu dhoop hai jham se bikhar, tu hai nadee, o bekhabar. Beh chal kahin ud chal kahin, dil khush jahan teri woh manzil he wahin' என்ற வரிகள் நமக்கே புது புத்துணர்வு தருவதாகவுள்ளது. வண்ணமயமான காட்சியமைப்பு, குழந்தைகளும் கண்ணெடுக்காமல் பார்க்கும் பாடல்.

'பம் பம் போலே' என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல். சோகமான காட்சிக்கு பிறகு மனதை துள்ள வைக்க ஆமீர் கான் & ஷான் குரலில் இடைவேளையைத் தொடர்ந்து துள்ளிவரும் இந்த பாடல் எல்லா குழந்தையையும் ஆட வைக்கும் .

எல்லா பாடல்களுமே நல்ல பொருட்பட அமைந்து, அதற்கேற்ற காட்சிகள் செறிவாக வந்திருக்கிறது. எல்லா பாடல்களும் நன்றாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'மே கபி பதாத்தா நஹீ' என்ற பாடல். கண்டிப்பாக எல்லோரையும் கலங்க செய்திருக்கும். இந்த கட்டத்தில் அழ ஆரம்பித்ததுதான்... இன்னும் அந்த பாடலை கேட்டாலும் தன்னாலேயே கண்கள் நிறைகிறது காரணமின்றி. 'தாரே ஜமீன் பர்' தாரை தாரையாக கண்ணீர் வடிக்க செய்தது. அதற்காக இது சோகமான அழு மூஞ்சிப்படமென்று ஒதுக்கிவிட வேண்டாம். அப்படியல்ல இது சோகத்தில் ஏற்படும் கண்ணீரல்ல உணர்ச்சியில் வசப்படும் போதும் நெஞ்சை நனைக்கும் கணங்கள் ஏற்படும் போதும் ததும்பிக் கொண்டு நம் மனதை லேசாக்க எழுமே அப்படியான கண்ணீர் அது.

எனக்கு தெரிந்த வகையில் தமிழ்படுத்தியுள்ளேன்.

Main Kabhi Batlata Nahin |நான் எப்போதும் சொன்னதே இல்லை
Par Andhere Se Darta Hoon Main Maa |ஆனால் இருட்டென்றால் பயம்தானேம்மா
Yun To Main,Dikhlata Nahin |நான் எப்போதும் வெளிக்காட்டியதில்லை
Teri Parwaah Karta Hoon Main Maa | உங்கள் மீது எனக்கு அக்கறையுண்டு அம்மா
Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே.. என்னுயிர் அம்மா

குழந்தையின் ஒவ்வொரு அசைவும் யாருக்கு புரிகிறதோ இல்லையோ ஒரு தாயிக்கு சொல்லாமலே விளங்கும், அதை ஆணித்தரமாக நம்பும் குழந்தை தாயைவிட்டு விலகப் போகிறோம் என்று தவிக்கும் தவிப்பை இந்த ஒரு பாடலே சொல்லி முடிக்கிறது. எந்த ஒரு காட்சியும் ஜவ்வாக நீளமாக இழுக்காமல் கோர்வையாக டக்டகென்று முடித்திருக்கும் அபார யுக்தி அமுல் குப்த்தின் மனைவி தீபா பாட்டியாவுடையது.

Bheed Mein Yun Na Chodo Mujhe |கூட்டத்தில் என்னை விட்டுவிடாதீர்கள்
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa |வீட்டுக்கு திரும்பி வரவும் தெரியாதேம்மா
Bhej Na Itna Door Mujkko Tu |தொலைதூரம் என்னை அனுப்ப வேண்டாமே
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa |என் நினைவுகளும் உங்களுக்கு இல்லாமல் போகும்மா
Kya Itna Bura Hoon Main Maa |நான் அவ்வளவு கெட்ட பையனாம்மா?
Kya Itna Bura Meri Maa |நான் அவ்வளவு கெட்ட பையனா...என்னுயிர் அம்மா?

தாயை பிரிந்து விடுதிக்கு செல்லும் ஒரு குழந்தையின் நிலையை, நிரந்தரமாக தாயை பிரிந்த பிஞ்சுகள் பார்த்து அழும் போது, ஏனோ அந்த பாடல் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த அபியும் இடது பக்கத்திலிருந்த ஜெஸியும் (ஆசிப்பின் மக்கள்) மறைந்த அவர்களது தாயை நோக்கி 'எங்களை நன்றாக அறிந்த நீங்கள், எங்களை விட்டு தொலைதூரம் சென்றது ஏன்?' என்று கேட்பதாக பட்டது எனக்கு.

Jab Bhi Kabhi Papa Mujhe |எப்போதும் அப்பா என்னை
Jo Zor Se Jhoola Jhulate Hain Maa |வேக வேகமாக ஊஞ்சலிலாட்டும் போது அம்மா
Meri Nazar Dhoondhe Tujhe |என் கண்கள் உங்களைதான் தேடுகிறது
Sochu Yahi Tu Aa Ke Thaamegi Maa |என்னை நீங்கள் வந்து கெட்டியாக பிடித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன் அம்மா

Unse Main Yeh Kehta Nahin |அவரிடம் இது பற்றி சொல்ல மாட்டேன்
Par Main Seham Jaata Hoon Maa |ஆனால் உள்ளுக்குள் பயம் தானே அம்மா
Chehre Pe Aana Deta Nahin |முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமலிருந்தேன்
Dil Hi Dil Mein Ghabraata Hoon Maa |என் மனதிற்குள் நான் பயந்தேன் அம்மா

Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே..என்னுயிர் அம்மா

(Main Kabhi Batlata Nahin)

பாடலை கேட்க இதை கிளிக்கவும்

பாடல் மழையில் நனைந்த நீங்கள் திரையில் குடும்பத்துடன் படத்தையும் பார்த்துவிடுங்கள். இந்த படத்தை பார்க்க குழந்தை பிரியராக, ஒரு தகப்பனாக, தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இது நம் மனதில் ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தை தட்டி எழுப்பும் படம். எந்த படத்தையும் ஒப்பிட முடியாத விதிவிலக்கான அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியப் படம்.

கொசுறு: இது எனது 100வது பதிவு

Tuesday, December 25, 2007

எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் மறுபக்கம்


கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் என்னுடைய 'கல்லூரி - நிஜமும் நிழலும்'- பதிவுக்கு வந்தவை. அரசாங்க விடுமுறையை கல்லூரிகள் தர மறுக்கிறது என்று நான் எழுதப் போக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதிர்ச்சி தரும் பின்னூட்டங்கள். இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

hi jaseela,
even i'm a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing our coll did last year.

everybody outside thinks tht our coll is gr8 and it has campus placements n all. bt the rule for the placement is tht every student who are selected in placements must give their first month salary to the coll tht too b4 receiving the salary. if they don giv the offer letters frm the company wont b given to that student.

idhu kodumailayum kodumaila...

*******************

Hello jazeela,
someone from my college has written about that campus placement. i appreciate her guts and that rule is true. so u dont have to worry about its authenticity. But she forgot to include an idiotic incident that happend last year.

A student from our college was selected from the company google. The college asked her to pay Rs.20000 (i.e) half the amount of her gross salary. She was from a middle class family and so she didnt have that amount at hand. So her father said he'll pay when she receives her first salary. The management insulted her father and asked him to get out of the office and the pathetic thing is that the girl was barred from writing her end semester exam.

How cheap it is????

கல்வி வியாபாரமயமாகி விட்டதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இந்த வகையில் தரம் தாழ்ந்து வருவதை அறியும் போது கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது. பெற்றவர்கள் பார்த்து நல்ல கல்லூரியென்று சேர்த்தால், படிக்குமிடத்திலேயே மகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாய்ப்பு இருப்பதாக நம்பினால் இப்படியொரு இடியா வந்து விழும்? தனியார் மயமாக்கல், தன்னாட்சி என்று கல்லூரிகளுக்கு ஆதிக்கம் வந்துவிட்டதால் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இது போன்ற கல்லூரிகளுக்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்தால்தான் என்ன? ஒரு கல்லூரிக்கு செய்துவிட்டாலே ஒட்டுமொத்த கல்லூரிக்கும் ஒருவித பயமிருக்கத்தான் செய்யும். எந்த ஒரு செயலை செய்யும் போதும் யோசிக்கவே செய்வார்கள்.

வேலை வாங்கி தரும் பிரதிநிதி நிறுவனங்கள் (recruitment agencies) கூட தனக்கான ஊதியத்தை நிறுவனங்களிடம்தான் வாங்கிக் கொள்ளுமே தவிர வேலையில் சேரும் நபரிடமிருந்தில்லை. அப்படியிருக்க அற்பத்தனமாக முதல் சம்பளத்தை வேலையில் சேரும் முன்பே மாணவிகளிடம் வாங்குவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

எங்கேயோ இருக்கும் என் காதுகளுக்கு இது போன்ற விஷயங்கள் எட்டும் போது உள்ளூரிலேயே இருக்கும் ஊடங்கள் ஊமையாக இருக்க காரணமேதும் உண்டா? சின்ன சமாச்சாரங்களையும் 'சிறப்புப் பார்வையாக' ஊதி பெருசாக்குபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது அலசி செய்தி வெளியிடுகிறோம் என்ற விகடகவிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லையா? ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் அல்லவே!

என் முந்தைய பதிவிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தவிர, கல்லூரியின் நிழலிற்கு ( பட விமர்சனத்திற்கு) மட்டுமே பின்னூட்டமிட்ட பதிவர்கள் நிஜத்தைக் கண்டும் காணாமல் போனது ஆச்சர்யமளிப்பதாய் இருந்தது. ஊடகங்கள் அரசியல் சார்பாக, சாதி ரீதியாக, வியாபார மயமாகிப் போய்விட்டன, நம்மைப் போன்ற வலைப்பதிவர்களாவது ஒளிந்துக்கிடக்கும் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகமாக நம் வலைப்பதிவை அமைத்துக் கொள்வோமே? சேர்ந்து குரல் கொடுங்கள். அதன் மூலம் சேர வேண்டிய காதுகளுக்குச் சென்று சேர வைப்போம்.

Sunday, December 23, 2007

கல்லூரி - நிழலும் நிஜமும்

சமீபத்துல வந்த படங்களில் சில படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு பலர் சொல்லி கேட்கும் போது பார்த்தே தீர வேணும்னு ஆச வருது. எங்க ஊருல பெரிய பிரபலங்கள் நடிச்சாத்தான் படமே திரைக்கு வருது. இந்த வாரம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம். 'எவனோ ஒருவன்', 'கல்லூரி'ன்னு சில நல்ல படங்கள் திரைக்கு வரும் வரை காத்திருக்க முடியாம குறுந்தகடுக்கு வேட்டையாடி 'கல்லூரி' கிடைச்சுது.


'கல்லூரி' படத்துல யாரு நடிச்சிருக்காங்கன்னு கேட்டுறாதீங்க சத்தியமா எனக்கு தெரியாது (தமானா, கதின்னு படிச்ச நினனவு). ஒரு முகம் கூட தெரிஞ்ச முகம் கிடையாது. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு அசாத்திய தைரியம்தான்னு சொல்லலாம். அதுவும் பார்க்குறா மாதிரியான 'பாய்ஸ்' படத்துல வர மாதிரியான அழகழகான மூஞ்சிங்கக்கூட கிடையாது ஆனா யார் நடிப்புக்கும் பஞ்சமே இல்ல. கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் நம்ம நட்பு வட்டத்துக்குள்ள வந்த உணர்வை ஏற்படுத்திடுறாங்க. படத்தை பார்க்கும் போது 'ஞாபகம் வருதே'ன்னு பாட தோணுது. கதாநாயகன் பாவம் கொஞ்சம் நடிக்க சிரமப்பட்டிருப்பார் போல தெரியுது. இயக்குனருக்கு பெண்ட் கழண்டிருக்கும். கயல் கதாபாத்திரம் தான் கதாநாயகியவிட மனசுல நிற்கிறாப்புல இருக்கு. ரொம்ப யதார்த்தமான காட்சியமைப்புகள் இருந்தாலும் நிறைய தேவையில்லாத சொருகுதலும், கூடவே சில ஓட்டைகளும். ஏதோ நிறைய சொல்ல வந்ததை அப்படியே விட்டுட்டா மாதிரி இருக்கு படம். ஒவ்வொரும் மாணவருடைய நிலைப்பாட்டையும் ஆழமா காட்டாம லேசா கொண்டு போயிருக்காங்க. ஒரு மாணவி சலீமாவின் அப்பாவுக்கு நெஞ்சுவலின்னு சொன்னதும் மொத்த மாணவர்களும் தம் தகப்பனுக்கு நேர்ந்தது போல முகத்தை வைச்சுக்கிறவங்க, அதே அப்பா இறந்த காட்சிய கனமில்லாம காட்டியிருக்காங்க. அப்பா இறந்தாலும் பரீட்சை எழுத போகிறாள் சரி, அந்த மனநிலையில் பரீட்சை எழுதுவதை சர்வசாதாரண விஷயமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கு, அதக்கூட விட்டுடலாம் ஆனா அந்த காட்சிக்கு அடுத்த காட்சியே பரீட்சை அறையிலிருந்து வெளியில் வந்த பிறகு கதாநாயகிக்கு வந்த வாழ்த்து அட்டையை பார்த்து சிரிப்பது போல காட்சியமைப்பு. அப்பா இறந்து மறுநாளே சொந்த மகள் உட்பட அடுத்த நாளே கல்லூரியில் சிரித்துக் கொண்டிருப்பது ஏதோ நாடகம் போல ஒட்டாம இருக்கு. மெல்லிய நகைச்சுவைக்கு குறைவே இல்லை. 'டாடி'ன்னு ஒவ்வொருத்தர் வீட்டிலையும் அழைப்பதா நினைத்து பார்க்கும் காட்சி அருமை. நகைச்சுவைக்காக இரண்டு மாணவர்கள் தோன்றும் போதெல்லாம் சிரிப்பு தன்னால வந்திடுது. மத்தப்படங்கள் மாதிரி 'டூயட்' கண்றாவியெல்லாமில்ல இசை ஜோஷ்வா ஸ்ரீதர்தான் இந்த படத்துல. பின்னணியோசையில் சில பாடல்கள், காதல் காட்சிகளில் பழகிய இளையராஜாவின் ஒலி கீதங்கள். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் 'உன் பார்வையில் ஓராயிரம்' நல்லவேளையாக 'ரீமிக்ஸ்' சமாச்சாரமெல்லாமில்லாமல் தப்பித்து அப்படியே ஒலிப்பது நேர்த்தியா இருக்கு. கல்லூரியை பின்னணியா வைச்சு நிறைய படங்கள் வந்திருக்கு ஆனா அதையெல்லாம்விட்டு தனித்துக் காட்டவோ அல்லது பாலாஜி சக்திவேலென்றாலே ஒரு உண்மை சம்பவம் படத்தில் ஒளிந்து கிடக்கும் என்று பெயர் வாங்கவோ அந்த கடைசிக் காட்சி தர்மபுரி தீ விபத்து அமைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. சர்ச்சைக்குரிய படமாக்கினாலும், அரசியல் வாசனையிருந்தாலும் படத்தை ஓட்டிவிடலாம் என்பதற்கான யுக்தியாயென தெரியவில்லை ஆனா ஏதோ அவசரகதியா மனசை சஞ்சலப்படுத்தாமல் 'டபக்கென்று' முடிந்து விடுகிறது கடைசிக் காட்சி. அழுத்தமாக பதிய வேண்டிய படம், இன்னும் நல்ல வந்திருக்க வேண்டிய படம் என்றெல்லாம் இங்க உட்கார்ந்துக் கொண்டு எழுதுவது சுலபம்தான் ஆனா படம் எடுப்பவர்களுக்குத்தானே தெரியும் கஷ்டம். அதனால விட்டுடலாம். மொத்ததுல நல்ல படம்ப்பா பார்க்காம விட்டுடாதீங்க.

அப்புறம், கல்லூரின்னாலே கலகலப்புன்னு படங்களை காட்டி காட்டியே பசங்களை உசுப்பேத்தி விடுறாங்க ஆனா இன்னும் நிறைய கல்லூரி பள்ளிக்கூடத்தை விட மோசமாத்தான்ப்பா நடத்துறாங்க. இங்க துபாயில் 19ம் தேதி ஈத் (தியாகத் திருநாள்) - இங்க ஒரு பெருநாள் வாழ்த்தை சொல்லிக்கிறேன் எல்லாத்துக்கும், சென்னையில 21ந் தேதித்தான் ஈத். அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேரம்தான் வித்தியாசம் ஆனா என்ன மாயமோ தெரியல பண்டிகைகள் மட்டும் இரண்டு நாள் வித்தியாசத்துல வருது. வார விடுமுறைய கணக்கிட்டு வருதோ என்னவோ. மழைக் காரணம பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறைன்னு அரசு அறிவிச்சாலும் எம்.ஓ.பி. வைஷ்னவா மகளிர் கல்லூரி (MOP Vaishnava College for Women -Autonomous) மட்டும் அடம்பிடிச்சி கல்லூரிய திறந்து வைக்கிற மர்மம்தான் என்னவோ? அதுவாவது பரவால ஈத் பெருநாளுக்கு அரசு விடுமுறை ஆனா அன்றைக்குதான் பரீட்சை வைப்பேன்னு அடம்பிடிச்சு விடுமுறை தராம பரீட்சை வேற. பாவம் பிள்ளைகளின் கோரிக்கையெல்லாம் நிராகரிச்சிட்டு அப்புறம் போனாப் போகுதுன்னு முஸ்லிம் பிள்ளைகளுக்கு மட்டும் ஈத்துக்கு விடுமுற, அன்றைக்குள்ள பரீட்சைய ஜனவரி 2ந் தேதி தனியா எழுதிக்கிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். என்ன கிறுக்குத்தனம் இது? நானும் கேட்டு வைச்சேன் "எல்லாரும் சேர்ந்து அரசு விடுமுறை அதனால பரீச்டைக்கு வராம 'பங்க்' அடிப்போம்ன்னு சொன்னா என்ன"ன்னு. "அடிச்சா எங்க மதிப்பெண்கள்தானே போகும்"னு பாவம் புலம்புறாங்க பசங்க. "சிறுபான்மையினர்னாலே எளக்காரம்தான்"னு நான் சொல்ல "ம்ஹும் முஸ்லிம்கள்னா மட்டும்தான், ஏன்னா கிருஸ்துமஸ்ஸுக்கு விடுமுறைதானே"ன்னு சொல்றாங்க. "அப்ப இது எளக்காரமில்ல ஏதோ வெறுப்பு, பகைமை"ன்னு நான் சிரிச்சேன். அதுக்கு "பார்ப்பனீயம்"னு முணுமுணுப்பு. 'இதுல பார்ப்பனத்தனம் ஒளிஞ்சுக்கிட்டிருக்கிறதா இல்ல சில பார்ப்பனத்தலைகள் ஒளிஞ்சிருக்கிறதான்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஜாலியா இருக்கிற பசங்க வயித்தெறிச்சலையெல்லாம் கொட்டிக்கிறது நல்லதுக்கில்ல.

Saturday, December 15, 2007

மறுபடியும் வந்துட்டோம்ல


கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் வராததால் நான் என்னவோ என் கடைசி பதிவுக்கு மிரட்டல் வந்து நான் பயந்து ஒளிந்துக் கொண்டதா வதந்தியப் பரப்பிக்கிட்டு திரியுறாங்கோ. அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்ல சாமி, நிஜமாவே அப்படி ஏதாவது மிரட்டல் வந்திருந்தா அதுக்காகவே வம்படியா தொடர்ந்து எழுதியிருப்பேன் 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே'.

எழுத நினைத்த ஒரு புதிய பெண் வலைப்பதிவரையும் 'ஜெஸிலாவுக்கு என்ன கதியாச்சு பாத்தியா, அத மனசுல வச்சுக்கிட்டு சும்மா பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக்கோன்னு' அந்த பெண் பதிவருடைய கணவர் - அவரும் பதிவர்தாங்க - மிரட்டல் விடுத்திருக்கிறார்னா பார்த்துக்கிடுங்க வதந்தி எப்படிலாம் பரவுதுன்னு. இது என் காதுக்கே எட்ட, ம்ஹும் இனி சும்மா இருக்கக் கூடாது, வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டிடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வந்துட்டேன். 'என்ன கொடும சரவணன்'னு புலம்புறதை நான் காதில் வாங்கிக்கிறதா இல்ல.

சரி உள்ளே வரும்போதே ஒரு நல்ல தமிழ்ப்படத்தின் திரைவிமர்சனம் தரணும்னு நானும் திரையரங்கா ஏறி இறங்குறேன், ஒரு நல்ல படம் மாட்டலையே. 'அழகிய தமிழ் மகன்' அழுகிய தமிழ் மகனாப் போச்சு, 'வேல்' - சுமார் கூர்மை இல்லை. சரின்னு நேத்து 'பில்லா' படத்துக்கு டிக்கெட் வந்தது, குழந்தைகளுக்காக போவோம்னு பார்த்தா கடைசில எந்தக் குழந்தையும் வரல என் மகளைத் தவிர. அவளுக்கும் படம் பிடிக்கல போலிருக்கு.

அஜீத்தெல்லாம் கதாநாயகரா நடிக்கிறத கொஞ்சம் நிறுத்திக்கணும். முகத்துல சதையெல்லாம் தொங்கி மனுஷன் பெரிய திரையில் பரிதாபமா இருக்கார். கமல் இந்த வயசில் முகத்தில் வயசு தெரியுறாப்புல இவருக்கு இப்பவே - ரொம்ப குடிப்பாரோன்னு பக்கத்துல யாரோ கிசுகிசுத்தாங்க. கொஞ்சம் 'பேஸ் லிப்ட்' செஞ்சா தேவலைன்னு இன்னொருத்தர் அரங்கில் கத்துறார். பிரபுவுக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் ஒட்டவேயில்லை, தொப்பையோடு இருப்பவர்களுக்குதான் டி.எஸ்.பி. பதவின்னு எழுதிக் கொடுத்திட்டாங்க போலிருக்கு. அந்த உயரமான போலீஸ்காரர் பக்கத்தில் பிரபுவின் உயரம் பளிச். தெரிந்த கதையை இன்னும் சுவாரஸ்யமா எடுத்திருந்தாத்தான் இன்னும் சுவாரஸ்யமே. இது வெறும் சொதப்பல். 'ச்சே! ரஜினி நடிப்பில் கால் தூசிக் கூட இல்லப்பா'ன்னு தலையில் கை வைக்கத்தான் சொல்லுது.

'நான் அவன் இல்லை' புது வடிவில் வந்த போது நிறைய பேருக்கு அந்த பழையப் படம் நினைவில் இல்லாததாலும் அதைவிட இது பிரமாதமாக சாயம் பூசப்பட்டிருந்ததாலும் கொஞ்சம் தாக்குப்பிடித்தது. ஆனால் இந்த பில்லாவில் நவீன மயமாக்கல் என்று சிகப்பு டைரியை 'பென் டிரைவ்'வாக மாற்றி, நிறைய செல்பேசி உபயோகம், பிரமாண்டமென்று ஹெலிக்காப்டர், மலேசியாவில் படப்பிடிப்பு என்று காசை வாரி இறைத்திருப்பது மட்டும்தான் புதுமையோ? படத்தை ஓட்டுபவருக்கே பிடிக்கவில்லையோ என்னவோ பழைய பில்லாவில் தேங்காய் சீனிவாசன் வரும் காட்சிகள் பிரகாஷ் ராஜ் வைத்து செய்திருப்பதாகக் கேள்வி அந்தக் காட்சிகள் அப்படியே துண்டிப்பு. கொடுத்த காசுக்கு 'கலேரியா' இப்படியா மோசம் செய்யும்? பில்லாவுக்கு எப்பவுமே ரஜினிதான் பொருத்தமென்று அஜீத் மூலமா நிரூபிக்க வேண்டும்?

நேற்று மதியம் வீட்டில் 'ப்ளைட் ப்ளேன்' என்ற அருமையான ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு மாலையில் 'பில்லா' பார்த்தது நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு, ருசி கெட்டதை அதன் பிறகு வாயில் போட்டு, நாக்கே கெட்டுப் போச்சுன்னு சொல்வோம்ல அந்த மாதிரிதான். ஆனாலும் நமீதாக்காகவும், நயந்தாராக்காகவும் நம்மூரில் படம் ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம்மவர்கள் ரசனையே தனிதானே.

Tuesday, September 18, 2007

பெண்கள் போகப் பொருளா?

ந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன்.

நான் ரொம்ப காலமா தொலைக்காட்சியே பார்க்காம இருந்தேன். தொலைக்காட்சியில் எது பார்க்கிறேனோ இல்லையோ சின்ன வயசிலிருந்தே விளம்பரம்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்பல்லாம் அந்த விளம்பரத்தை கண்டாலே வெறுப்பு வளரும் அளவுக்கு ஊடகம் வளர்ந்திடுச்சு. ஒரு பொருளோட விளம்பரம் தொலைக்காட்சியில் எதுக்கு வருதுன்னு நினைக்கிறீங்க? ஒரு பொருளை மக்கள் மத்தியில் எப்படி அறிமுகப்படுத்துவது, கொண்டு சேர்ப்பது என்பற்கான யோசனை, பல மூளைகளின் வேலை, அதன் மொத்தத் தோற்றம், இது தானே விளம்பரம் என்பது? அதைப் பார்த்து நீங்க அந்த பொருளைப் பத்தி தகவல் தெரிஞ்சக்கணும்னுதானே? பொருளைப் பரவலா அறிமுகம் செஞ்சா அதை நாம் வாங்கணும்னு தானே? விளம்பரம் என்பதன் மூலம் அது நம்மை அடையணும், நம்ம மனசுல அந்தப் பொருள் பதியணும்னுதானே? ஆனா இப்ப உள்ள விளம்பரங்களெல்லாம் அதற்காகப் போடுறா மாதிரியே தெரியலை? 'எதற்கான விளம்பரம் இது' என்று யோசிக்கும் அளவுலதான் விளம்பரப் படங்கள் எடுக்கிறாங்க.

எல்லா விளம்பரங்களிலும் ஒரு குத்தாட்டம் இல்லாம இல்ல. புடவைக்கான விளம்பரமானாலும் சரி சிமிண்ட்டுக்கான விளம்பரமானாலும் சரி அந்த காலகட்டத்து படப்பாடலையொட்டிய ஒரு ஆட்டம் கண்டிப்பா இருக்கணும்கற அளவில் தான் விளம்பரம் தயாரிப்பவர்களுடைய மூளை வேலை செய்யுது. மேலை நாட்டு கலாச்சாரம்னும் சொல்ல முடியாது ஏன்னா அவங்க விளம்பரங்களில் குத்தாட்டமெல்லாமிருக்காதே? விளம்பரப்படுத்த வேண்டிய பொருளைக் காட்டுறாங்களோ இல்லையோ கண்டிப்பா ஒரு பெண் வலம் வந்துட்டு போய்டுவா. இது என்ன மாதிரியான போக்குன்னே (டிரெண்ட்னே) தெரியலை. விளம்பரப்படுத்த வேண்டிய பொருளை ஒரு நொடிதான் காட்டுவாங்க - ஆனா அந்த விளம்பரத்திற்கு வரும் பெண் மாடலை எல்லாக் கோணங்களிலும்.

பெரும்பாலான விளம்பரங்களில் பெண்கள் அதிகம் அழகுக்குத்தான் ஆர்வம் காட்டுவதாகவும், எப்படி ஆண்களை வளைத்துப் போடுவதுன்னு என்பதில்தான் முனைப்புடன் செயல்படுவதாகவும் தான் விளம்பரத்தை அமைக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தேவையான பொருளுக்கான விளம்பரம்னா சரி ஒரு பெண் வருவது நியாயம்னு சொல்லலாம். இரு பாலரும் உபயோகிக்கும் பொருளான குளிர் பானம், உணவுன்னு ஏதாவதென்றாலும் கூட ஒத்துக்கலாம். ஆனா ஆண்களின் உள்ளாடை சமாச்சாரங்கள் தொடங்கி, சவரம் செய்யும் உருப்படிகளிலிருந்து, ஓட்டும் பைக் வரை எல்லா விளம்பரங்களிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் இருந்தாக வேண்டும்னு ஆகிப்போச்சு. அட்டகாசமான பனியனைத் தடவி பார்க்க விளம்பரத்தில் ஒரு பெண். சரி ஆணை இரசிப்பது பெண்கள் அதனால் அந்தக் கட்டத்தில் பெண்கள் அவசியமென்று சில ஆணாதிக்கவாத மூளை சொல்லலாம். அப்படிப் பார்த்தால் எல்லா தங்க நகை விளம்பரத்திலும் ஒரு ஆண் வேணுமா வேணாமா? ம்ஹும், அங்க ஆண் இருக்க மாட்டார். இதிலிருந்து என்ன தெரியுது? விளம்பரப்படுத்தும் அனைத்துமே ஆண்கள் பார்ப்பதற்காகத் தயாரிக்கப்படுகிறது. அவர்களைக் கவர்வதற்காகவே ஒரு பெண்ணை விளம்பரத்தில் புகுத்துகிறார்கள். பெண்கள் ஆண்கள் மீதான ஆளுமை இந்த இடத்தில்தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது எந்த மாதிரியான ஆளுமை?

ஊருக்குப் போயிருக்கும் போது பெரிய ஹோர்டிங் போர்டை பார்த்தேன் 'Definitely Catchy' என்று எழுதி ஒரு அழகான பெண்ணின் பிரம்மாண்ட புகைப்படம், என்ன விளம்பரம்னு பார்த்தா - Deccan Chronicle பத்திரிகைக்கான விளம்பரம். விளங்கிடும்னு நினைச்சுக்கிட்டேன். நேற்று பார்த்த விளம்பரம்தான் கொடுமையின் உச்சக்கட்டம் 'ஆக்ஸ்' வாசனைத் திரவியத்தின் விளம்பரம். வாசனைக்கு ஒரு ஆணை நோக்கி ஆயிரம் 'உரித்த கோழிகள்' ஓடி வருவதாகக் காட்சியமைப்பு. பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விளம்பரம். 'உரித்த கோழிகள்' என்று குறிப்பிட்டிருப்பது அரை நிர்வாண உடைகளில் இல்லை இல்லை முக்கால் வாசி நிர்வாண உடைகளில் பெண்கள் (உடைகளே இல்லை என்பது தான் பிரச்சனை). இந்த விளம்பரம் அப்பட்டமான ஆணாதிக்க மூளையின் பிரதிபலிப்பு. ஒரு பெண்ணுக்கு தேவை மாமிச இச்சை என்பது போலவும், மயக்கும் வாடையில் மயங்கி எவனுடனும் ஒரு பெண் அலைந்துக் கொண்டு ஓடி வந்து விடுவாள் என்பது போலவும், கேவலம் காசுக்காக பெண் ஒரு போகப் பொருள் மட்டுமே என்பதையும் பறைசாற்றும் விளம்பரம். பெண்கள் வெறும் கவர்ச்சி பொம்மைதான்ல? வெறும் காட்சி பொருள்தான்ல? இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று பெண்கள் சொன்னால்தான் என்ன? இந்த மாதிரியான கொடுமையான விளம்பரங்களை ஊடகங்கள் போட மறுத்தால்தான் என்ன?

வீணாப்போனவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் அதற்கு போராட்டம் நடத்தி வீண் என்பதால் சமூக ஆர்வலர்களும், மகளிர் மன்றங்களும் இருந்து விட்டனவா அல்லது பழகிப் போன அறிவுக்கு இதெல்லாம் பழகிப் போய் அறியாமையின் உச்சக்கட்டம் கண்ணில் பட்டும் காணாதவர்களாக இருக்கிறார்களா? கண்டதற்கெல்லாம் பொங்கி எழும் கூட்டமெங்கே!? ஓ! இதற்கும் காசுக் கொடுத்தால்தான் விழித்து எழுவார்களோ இவர்கள்? ஒருவேளை கற்பு, கலாச்சாரம், பண்பாடுன்னு பேசுறாங்களே அது இதுதானோ? பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Thursday, September 13, 2007

ஆவியில் வந்த கிறுக்கல்கள்


ஆனந்த விகடன் வரவேற்பறையல நம்ம வலைப்பூ பத்தி வந்தாலும் வந்துச்சு ஆளாளுக்கு 'யாரப் புடிச்ச? எவ்வளவு கொடுத்த? இந்த இலவச விளம்பரத்துக்கு'ன்னு ரொம்பவே கொச்சப்படுத்துறாங்கப்பா. சில வலைப்பதிவர்களை கடந்து போனாலே கரிஞ்ச வாட வருது, 'நான் வருஷக் கணக்கா எழுதுறேன் என்னுது வரலை உன்னுது எப்படி வந்துச்சு?'ன்னு வயித்தெரிச்சப்படுறாங்க. காதுல புகைக் கூட கவனிச்சேன். எங்க வீட்டுல கூட 'எப்படி ஜெஸி?'ன்னு கேட்டாங்க, 'என் கடன் பணி செய்துக்கிடப்பதே'ன்னு சொன்னேன். 'பார்த்து, யாராவது பொறாமைல அடிச்சி ரோட்டுல கிடக்கப் போற'ன்னு பயமுறுத்திட்டுப் போறாங்க. இதுல வேற நேத்து 'மெட்ரோ நியூஸ்'லயும் நம்மள பத்திப் போட்டிருக்காங்கன்னு செய்தியைப் பார்த்தேன். நம்ம இலங்கை நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் தகவலுக்கு நன்றி சொல்லி வந்தேன்.

அப்புறம் பின்னூட்டத்தில் வாழ்த்தியவர்களுக்கும், தனி மடலில் தனியா வாழ்த்தியவங்களுக்கும், தொலைபேசி வாழ்த்தியவர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. ஆனந்த விகடனில் நம்ம வலைப்பூ பத்தி வரது அவ்வளவு பெரிய விஷயமான்னு இருந்தேன், என் கவுண்டர் ஓடிய ஓட்டத்தை பார்த்துத்தான் ரொம்பப் பெரிய விஷயம்தான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

எங்க ஊருல ரமதான் இன்று ஆரம்பம் (துபாயை எப்போ உங்களுக்கு எழுதிக் கொடுத்தாங்கன்னு ஆரம்பிச்சுடாதீங்க மக்கா). எல்லா மக்களுக்கும் ரமதான் கரீம்.

Thursday, September 06, 2007

விட்டு விலகி நின்று...


உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் தாயை இழந்த சிறு வருத்தம் கூட உன்னிடம் தென்படாதது எனக்கு வியப்பாக இருந்தது. என்னளவுக்கு அந்த வயதில் உனக்கு முதிர்ச்சியில்லை என்று நான் தவறாக விளங்கிக் கொண்டதை உன்னிடம் பழகிய பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

எனக்கு நிறைய தோழிகள் உண்டு, உனக்கு நான் மட்டும்தான் தோழியாக இருந்தேன். அப்படியாக நீ ஏற்படுத்திக் கொண்டாய். யாரிடமும் எளிதில் ஒட்ட மறுத்துவிடும் உன் சுபாவம், உன் வித்தியாசமான மனப் போக்கு, விசித்திர கண்ணோட்டம், அதிசய சிந்தனை, கடிவாளமில்லாத உன் கற்பனை எல்லாவற்றிற்கும் உனக்குப் பொருத்தமான அலைவரிசையில் நான் மட்டுமே பொருந்திப் போனதாய் சொல்லிக் கொள்வாய். அதனால் உன்னையே என் நெருக்கமான தோழியென்று சொல்லச் சொல்லி அடம்பிடிப்பாய். நாம் சேர்ந்தே வளர்ந்தோம். பருவங்கள் மாறும் போது நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனதளவில் நாம் குழந்தையாகவே இருக்க விரும்பினோம். மாதவிடாயே வரக் கூடாது என்று பிராத்திக்கத் தொடங்கிவிட்டாய் நீ. அந்த மாற்றத்தில்தான் பெண்ணின் தலையெழுத்தே மாறிவிடுவதாக சொல்லி சாதித்தாய். அதெல்லாம் நாம் கட்டுப்படுத்தக் கூடியதல்ல என்பதை நாளடைவில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டது உனக்கு. உன் தந்தையென்றாலே உனக்கு எப்போதும் அலட்சியம்தான். 'அவரைக் கண்டாலே ஏன் எரிந்துவிழுகிறாய்' என்று நான் ஒருநாள் உன் செயல் பொறுக்காமல் கேட்டதற்கு உன் தாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாத தந்தையைப் பிடிக்கவில்லை என்றாய். உன் தாய்க்குப் பின் உன் தந்தை உனக்காகவே வாழ்ந்தாரே தவிர வேறு மனம் செய்துக் கொள்ளவில்லை என்று புரிய வைக்க முற்படும் போதெல்லாம் நீ பொருட்படுத்துவதில்லை. நானும் என் அறிவுரைகளைக் குறைத்துக் கொண்டேன்.

அழகாக வளர்ந்து வரும் நம்மை ஆண்கள் கண்களால் மேய்வதை உன்னால் துளியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பார்ப்பவர்களை நீ பார்க்காதே அலட்சியம் செய்' என்று எவ்வளவு சொல்லியும் யாராவது விழுங்குவது போல் பார்த்தால் போய் சண்டைக்கு நின்றாய். நான் துணையாக இருக்கும் தைரியத்தில்தான் இதையெல்லாம் செய்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டாய். நீ தனியாகப் போகும் போது எதிர்பாராத விதமாக அந்த காமுகன் நடுவீதியில் உன்னைக் கட்டியணைத்த சம்பவத்திலிருந்து உன்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதை விபரமாகச் சொல்ல முடியாமல் நீ தேம்பியதும் விம்மியதும் உன் கண்களில் நான் கண்ணீர் கண்டதும் அதுதான் முதல் முறை. இறுக்கமாக அணைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்றவனை ஒன்றுமே செய்ய முடியாமல் ஒடிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் போது அனைத்துமே தெரிந்த முகமாக இருந்தும் கேட்க ஆளில்லாமல் போனதற்குக் காரணம் அவன் புதுக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வாட்டசாட்டமான பலசாலியான தாதா. அன்றிலிருந்து கனவிலும் கயவர்களுடன் சண்டையிட்டு தூக்கத்தில் பேசுவதைப் பார்த்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் உன் அப்பா. ஆண்களை வெறுக்கும் உச்சக்கட்டத்திற்கே நீ சென்றுவிட்டதை உன் பேச்சிலிருந்து அறிந்துக் கொள்ள முடிந்தது. சில நேரங்களில் நீ வெறுப்பவர்களைப் பற்றிப் பேசும் போதே உன் நிலை மறந்து விசித்திரமாக நடந்துக் கொண்டாய். சில சமயங்களில் எனக்கு பயமாகக் கூட இருந்தது. நிறைய நாட்கள் உன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உன் அறையைத் தாளிட்டு வெளியில் இடிந்து உட்கார்ந்திருக்கிறேன். என் வற்புறுத்தலின் பேரில் மனநல மருத்துவரைச் சந்தித்து அறிவுரை எடுத்து வந்தது என்னை திருப்திபடுத்த மட்டுமே இருந்தாலும் பலன் இருப்பதாக நான் கருதினேன். அந்தக் காமுகன் மீண்டும் உன் கண்களில் படக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

உன் முடிவே சரியென்று நினைக்கும் உன்னை யாரும் மாற்றிவிடவோ கலைத்துவிடவோ முடியாததால் ஆண்களை வெறுக்கும் உனது சுபாவத்தை மாற்ற முயற்சி செய்ததில் எனக்குத் தோல்விதான். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியல்ல என்று உனக்கு விளங்க வைக்க என் சில நல்ல நண்பர்களை நட்பாக இணைத்து வைத்தேன், அதில் உனக்கு ஆத்மியைத் தவிர வேறு யாரையுமே பிடிக்காமல் போனது. ஆத்மியை உனக்கு பிடிக்கும் காரணமும் அவனது கண்ணியமான சுபாவம் என்று நீயே சிலாகித்திருக்கிறாய். உன்னை ஓரளவுக்கு மாற்ற முடிந்ததில் மகிழ்ந்தேன். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு தமிழ்த்திரைப்படங்களே பிடிக்காமல் போனது. கல்லூரியில் உன்னைப் போலவே நான் மற்றவர்களுடன் சரியாக ஒட்ட முடியவில்லை காரணம் எல்லா மாணவிகளுக்கும் பேச பிடித்த தலைப்பு 'ஆண்கள்', 'காதல்', 'அந்தரங்கம்'. எல்லாவற்றையும் ஓரளவுக்கு என்னால் சகித்துக் கொள்ள முடிந்தளவுக்கு உன்னால் முடியவில்லை - கல்லூரி வாழ்வையே வெறுப்பதாகச் சொன்னாய். படிப்பு முடிந்த பிறகு எனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்து நான் செல்ல ஆயத்தமான போது எல்லோரையும் விட மிகவும் வருத்தப்பட்டது நீதான் என்று எனக்குத் தோன்றியது. நான் அங்கு சென்று சூழல் சொன்ன பிறகு நீயும் என்னுடன் வந்துவிடுவேன் என்று கூறிக் கொண்டிருந்தாய். விமான நிலையத்திற்கு என் குடும்பத்தாரை தவிர்த்து வெளியாளென்றால் அது நீ மட்டும்தான். விமான நிலையத்தில் உன்னுடன் நான் ஆத்மியைப் பார்த்து ஆச்சர்யமாவதை கவனித்த நீ அவன் உன்னுடன் வரவில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் அவன் மூத்த சகோதரனை வரவேற்க வந்திருப்பதாக எனக்கு விளக்கமளித்தாய். எப்படியோ என்னைத் தவிர உனக்கு வேறு ஒரு துணையை விட்டுச் செல்லும் எக்களிப்பில் இருந்தேன்.

நான் இந்தியாவை விட்டுப் பறந்தது அக்டோபர் 26 காலையில். அவளிடமிருந்து அழைப்பு வராததால் அவளை நான் இரண்டு நாட்களுக்கு பின் தொடர்பு கொண்டேன். என் அழைப்பிற்கு அவள் பக்கத்தில் பதில் இல்லாததால் இரு தினங்கள் விட்டு மறுபடியும் அவளை நான் அழைத்தேன் ஆனால் மறுமுனையில் அவள் இல்லை, அவள் அப்பா பேச முடியாமல் அழுதார். நான் சென்ற அதே தினம் ஆரம்பமான அவளுடைய கொலை வெறி அடுத்த தினமே முற்றியிருக்கிறது. யாரையோ தேடிச் சென்று அவன் ஆண் உடைமையை அவள் வெட்டி வந்தது அக். 28 இரவு. அவள் கைது செய்யப்பட்டது இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழிந்து. ஆத்மியின் சகோதரன் தான் அந்தக் காமுகன் என்று நான் தெரிந்து கொண்டது அவள் கைதுக்குப் பிறகு. மனநலம் சரியில்லாத காரணத்தால் அவளைச் சிறையில் வைக்காமல் சிகிச்சை தர வேண்டுமென்ற வாதத்தில் வெற்றி பெற இரண்டு வாரங்களானது. மனநல மருத்துவமனையை விட்டு அவள் தப்பிக்க முயற்சித்ததாக சொல்லப்பட்டது நவம்பர் மாத இறுதியில். அவள் தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் வந்தது அவள் தப்பிக்க முயற்சி செய்த நாளுக்கு மறுநாள்.

நீ கண்டிப்பாகத் தற்கொலை போன்ற முடிவுக்கு வரமுடியாதவள் என்று உன்னை முழுதும் அறிந்த என்னால் மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் உனக்காக என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்?

Wednesday, September 05, 2007

ஆசிரியர் தின வாழ்த்து



தமிழ் எழுத்தை
கற்றுத் தந்த நீங்கள்
இன்று எங்கு இருக்கிறீர்கள்?
தினமும் ஒரு திருக்குறளென
இரு வரியை மனனம் செய்து
உரையை விவரித்த நீங்கள்
இன்று எங்கே இருக்கிறீர்கள்?
விதையை விதைத்துவிட்டு
விருட்சத்தின் வளர்ச்சியை
காணாமல்
எங்கு சென்றுவிட்டீர்கள்?

எங்களின்
முதல் சொல்
முதல் வாக்கியம்
முதல் சிந்தனை
முதல் கற்பனை
முதல் உளறல்
முதல் கவிதை
முதல் சந்தேகம்
என்று எல்லாமே
முதலில் பிறந்தது உங்களிடம்தானே?

முயற்சி, தன்னம்பிக்கை
போராட்டம், கடமை,
ஒழுக்கம், திறமை
என்று இல்லாதவற்றையும்
தோண்டி ஊற்றை
எங்களுக்குள் எடுத்த நீங்கள்
எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக
இருந்த நீங்கள்
இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?

உங்களுக்காக எழுதுகிறேன்
என்றதும் சின்னபிள்ளையாகவே
மாறிவிட்டேன்.
இந்த எளியவளை
ஏணியாக நின்று உயர்த்திவிட்டு
நீங்கள் மட்டும் அதே இடத்தில்
இருப்பதுதான்
ஆசிரிய தர்மமா?

எங்கிருந்தாலும் என்
ஆசிரியர் தின வாழ்த்தை
பெற்றுக் கொள்ளுங்கள்

உன் நினைவுகளோடு....



மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்

Wednesday, August 15, 2007

சுதந்திரம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா?

எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து ஒரு புள்ளியில் வந்து நிற்கிறதே மனது. அவன் மனைவி மக்களுடன் அமெரிக்காவில் சந்தோஷமாக இருக்கிறான் கொடுத்து வைத்தவன் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்ப மட்டும் என்னவாம் எது எப்படியிருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் கொடுத்து வைத்தவன் தான். அவன் எவ்வளவு சுலபமாகத் தன் மனைவிக்கு வேறு ஒருவன் பிடித்திருக்கிறது அதனால் அவளுக்கு அவனையே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் என்கிறான். "எப்படிடா அப்படி முடியும்?" என்றால் 'சிவில்' என்கிறான். குழந்தையைப் பற்றி நான் தயக்கத்துடன் கேட்டால் அவனோ 'மாற்றி மாற்றி எங்கள் வசதிக்கேற்ப பார்த்துக் கொள்வோம், எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது' என்கிறான் சுலபமாக. புரிதல் இருந்தால் ஏன் பிரிய வேண்டுமாம்? இடம் மாறிவிட்டால் நம் கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை எல்லாமுமா மாறிப் போகும்? ...ஏன் மாறக்கூடாது? இருந்தால் அவனைப் போல் தான் இருக்க வேண்டும். இந்தத் திருமணம், கட்டமைப்பு, ஒழுங்கு, ஒருவனுக்கொருத்தி இதெல்லாம் எப்போது பிறந்தது? மதம் வந்து முளைத்த பிறகுதான் இந்த கருமாந்திரமெல்லாம் வந்திருக்கக் கூடும். பெரியாரை தீவிரமாக வாசிக்கும் போதெல்லாம் அவர் திருமணத்தைக் குறித்து சொல்லியிருப்பதைப் படிக்கும் போதெல்லாம் பெரியார் மீது பழியைப் போட்டு திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதோடு சரி. திருமணம் என்ற ஒன்று வந்தே இருக்கக் கூடாது பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்ந்து, எந்தப் பொறுப்புகளும் சுமந்துக் கொள்ளாமல் வாழ்க்கையை அப்படியே நாம் விரும்பியபடி அமைத்துக் கொண்டு நேசித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இந்த சென்னையில் இருந்துக் கொண்டு நானே இப்படியெல்லாம் சிந்திக்கும் போது நான் நினைப்பது போன்ற வாழ்க்கை வாழும் அமெரிக்கர்களை சூழ வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனுக்கு இதற்கு மேலேயும் தோன்றியிருக்குமாக இருக்கும். நான் ஒரு பயிற்சிக்காக சிறிது காலம் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தபோது நான் சந்தித்த ஆங்கிலேயர் அதிசயமாகக் கேட்டது 'உங்க மனைவி நீங்க 1-2 வருடம் கழித்து உங்க நாட்டுக்குச் சென்றாலும் உங்களுக்காகவே காத்து இருப்பார்களா?' என்று மனைவியை இந்தியாவில் விட்டு அமீரகத்தில் வாழும் ஒரு தமிழரைப் பார்த்து பிரம்மிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாரே. அந்த ஆங்கிலேயர் இந்திய திருமண முறையைப் பற்றி எவ்வளவு இரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாழுபவர்களுக்குத் தான் தெரியும் அதிலுள்ள கஷ்டம் என்பதை அவரிடம் சொல்லமலேயே வந்துவிட்டேன். ஐரோப்பாவிற்குச் சென்றேன் என்றுதான் பெயர். போனேன் வந்தேன் என்று இருந்துவிட்டேன் - எதற்கும் நேரமில்லாமல் போனது. அதற்கே சந்தேகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஒரு மாதத்திற்கு மேலானது. இதற்கெல்லாம் பயந்தே என் மேலாளரிடம் நான் ஊரைவிட்டு எங்கும் எதற்காகவும் போவதாக இல்லை. அப்படியே போனால் குடும்பத்தோடுதான் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். ச்சீ என்ன ஒரு கேவலம் அதையும் பெரிய பெருமிதமாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். குடும்பக் கட்டமைப்புக்குப் பயந்தே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அல்லவா தகர்த்துவிட்டு வந்திருக்கிறேன்.

கையாலாகாத் தனத்தோடு எத்தனை நாட்கள் தான் நான் இப்படி குழந்தையாகவே தலையணையை நனைப்பது? எத்தனை பேர் என்னைக் காதலித்தார்கள், ஏன் தான் நான் தவறான துணையைத் தேர்ந்தெடுத்தேனோ? நானா தேர்ந்தெடுத்தேன்? இணையத்தில் தொடர்ந்து பேச்சாடல் (Chatting) செய்ததில் வந்து விழுந்தது இந்தக் கண்றாவி காதல். அப்போதே யோசித்திருக்க வேண்டும் இவளுக்கு என்னை எதற்காகப் பிடித்தது என்று. காதலை என்னைவிடத் தயக்கமின்றி தெரிவித்தது அவள்தானே? கடல் கடந்த வேலையில், கைநிறைய சம்பளத்தில், கணினியியல் படித்த இந்தத் திறமையான வீசிகரிக்கும் ஆணை யாருக்குத்தான் பிடிக்காது? வாழ்க்கையின் பாதுகாவலுக்கு ஒரு ஆளை தேடியிருக்கிறாள், பெண்களுக்கே உண்டான சுயநலமென்று நன்றாக யோசித்திருந்தால் என் மரமண்டைக்கு அதெல்லாம் புரிந்திருக்கும். அப்போதிருந்த தனிமையில் இவள் பேச்சாடலுக்கு அடிமையாகிப் போய் கைப்பிடிக்கவும் நேர்ந்துவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான வசந்த காலம் தான். நினைத்தால் இன்றும் இந்த நொடியும் இனிக்கிறதே!

காதல் என்ற போதையில் மிதந்துக் கொண்டே கல்யாண நாளை வரவேற்றேன். பிரச்சனையில்லாத காதல் திருமணம் நம்முடையதாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சாடலில் அவள் பேசியதற்கும் இப்போதிருக்கும் பிசாசிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவளா இவள்? திருமணம் முடிந்து ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று முடிந்துவிடாமல் குறைந்தது 4 வருடம் என் வாழ்நாளிலேயே சந்தோஷமானதாகத் தான் இருந்தது. எப்போது அவளுக்கு என் செயல்களில் நம்பிக்கையின்மை வந்ததோ சந்தேகம் என்ற நோய் வந்ததோ அப்போதே நான் செத்துவிட்டேன். எங்கள் காதல் பேச்சாடலில் நிகழ்ந்ததால் முதலில் நான் கணினியில் பேச்சாடல்களை நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டாள். 'முடியாதுடி சனியனே, நான் அலுவலகத்தில் பேசினால் உனக்கு தெரியவா போகிறது' என்று அந்த நொடியே பளாரென்று ஒன்று கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்காது. ஒவ்வொரு நாளும் என் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு மட்டும் தானே ஏதேனும் தவறு கண்டுபிடிக்க முடிகிறது. ஏன் இப்படியாகிவிட்டாள்? எதற்காக என்னை வதைப்பதோடு அவளையும் வதைத்துக் கொள்கிறாள்?

என் நண்பனின் மனைவி போல இவளுக்கும் யாராவது பிடித்திருந்தால் 'போய் தொலை' என்று அனுப்பிவிடலாமே, ஆனால் இவளோ அலாதியான பாசப் பிணைப்பு என்று பிதற்றிக் கொண்டு என்னை ஒரு நாய் குட்டிப் போல் கட்டி இழுத்து தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள அல்லவா ஆசைப்படுகிறாள்? நான் என்ன ஜடப் பொருளா அல்லது வீட்டில் இருக்கும் ஒரு மேஜையா அவளுக்காக உபயோகித்துக் கொண்டு உணர்வுகளே இல்லாமல் ஒரு மூளையில் முடங்கி கிடக்க? எனக்கென்ற நட்பு வட்டாரங்கள் கூட இவளால் சுருங்கிவிட்டது. சுருங்கிவிட்டதென்ன சுருங்கிவிட்டது இல்லாமல் போனதென்று சொன்னால் ரொம்பப் பொருத்தம். போதும் போதும் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அழுவதைவிட ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதான். நான் விவாகரத்து பிரிவு என்று நினைத்தாலே குழந்தை தான் என் கண் முன்னால் வந்து நிற்கிறாள். என் ஒரே பிடிப்பான என் மகள் என் கைவிட்டுப் போய்விட்டால்? அப்படி ஒன்றும் நடந்துவிடாது என் குழந்தை என்னிடம் இருந்து வளரவே விரும்புவாள். வருங்காலத்திற்காக இனியும் என் நிகழ்கால சந்தோஷத்தை இழக்க முடியாது. என் குழந்தையின் சந்தோஷத்திற்காக நான் ஏன் திருமணம் என்ற சிறையில் சிக்கிக் கொண்டு சிறகடிக்க முடியாமல் சிலுவையில் அறைந்தாற் போல் திண்டாட வேண்டும்? யோசித்து யோசித்தே தலையில் உள்ள பாதி முடியும் கொட்டிவிட்டது, வாழ்க்கையில் விரக்திதான் மிஞ்சியிருக்கிறது. போதும் போதும் இதற்கு ஒரு முடிவுக் கட்டியாகியே தீர வேண்டும்.

முடிவெடுத்தவனாக "போடி உங்க வீட்டுக்கு போய்விடு, விவாகரத்து நோட்டிஸ் வந்து சேரும்". மகளைப் பார்த்து "கண்ணா, இனி அப்பாதாண்டா உனக்கு எல்லாம். வா செல்லம் நீ தான் என் வாழ்வின் பிடிப்பே". "செல்லம், இனி நீ தான் என் வாழ்க்கையே" என்று அவள் சொல்லும் போதே தலையணையால் யாரோ அடிப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.

"எவ அந்த செல்லம் உங்க வாழ்க்கையோட பிடிப்பு? இப்படி கன்னாபின்னான்னு தூக்கத்தில பேசுறது, கேட்டா நான் பிசாசாகி போறேன்ல? என்று 'உர்'ரென்ற முகத்தோடு அவனை உலுக்கிக் கொண்டே கேட்டாள். "உங்க கூட சண்டப் போட நேரமில்ல. இன்றைக்கு சுதந்திர தினம் எங்க பள்ளிக்கூடத்துல விழா, அதுக்கு ஆசிரியர்கள் சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல? சரி நான் கிளம்புறேன், பாப்பாவும் என் கூட வரா... இட்லி வச்சிருக்கேன் அத சாப்பிட்டுட்டு, உங்களுக்கு கட்டி வச்சிருக்கிற டிபன் பாக்ஸை மறக்காம எடுத்துட்டு போங்க. அப்புறம் நீங்க போகும் போது எல்லா விளக்கும் விசிறியும் அணைச்சிருக்கான்னு பார்த்துட்டு, கதவெல்லாம் ஒழுங்கா மூடியிருக்கான்னு ஒருமுறைக்கு இரண்டு முறை செக் பண்ணிடுங்க. உங்க ஷர்ட் இஸ்திரி பண்ணி அங்க மாட்டியிருக்கேன்... சரி நேரமாச்சு நான் வரேன்..." என்று மூச்சு விடாமல் முழங்கிவிட்டு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்துக் கொண்டிருந்தாள்.

'ச்சே! எப்போ தூங்கிப் போனேன் நான்? அவளை வெளியே 'போ'ன்னு சொன்னது கனவா? அதானே எனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வரும்? அவ்வளவு சீக்கிரம் எனக்கு விடுதலை கிடைத்துவிடுமா என்ன? ஆனா இவ இல்லாட்டி என் பாடு திண்டாட்டம்தான். இனி இப்படியெல்லாம் யோசிக்கக் கூட கூடாதுன்னு இந்த சுதந்திர நாளில் உறுதி மொழி எடுத்திட வேண்டியதுதான்'.

Tuesday, August 07, 2007

யாஸ்மினுக்கு ஒரு கடிதம்

நீ இருக்கும் போதுக்கூட உனக்காக இப்படி ஒரு கடிதம் எழுத என்றுமே தோன்றியதில்லை எனக்கு. எல்லாமே 'ஃபார்வர்ட்' மடலாகத்தானே அனுப்பிவைத்தேன்?! ஆனால் அந்த மடல்களை அனுப்பும் போது உன்னை நான் நினைத்துக் கொள்கிறேன் என்பதை உணர்ந்தாயா? உன் மீது நான் வைத்திருக்கும் அடர்த்தியான அன்பை என்றுமே வாய்விட்டு சொன்னதில்லை இல்லை சொல்லியிருக்கிறேன் ஆனாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்று நினைத்துவிட்டதால் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாயோ? பக்கத்திலேயே இருப்பவர்களுக்கு என்றுமே நாம் கடிதங்கள் எழுதுவதில்லையே யாஸ்மின். தேவைப்பட்டால் ஒரு தொலைபேசி அழைப்புதானே?!. அதுவும் வேலை, அலுவல், குடும்பம் என்ற வரிசையில் நம் நட்பு பின்னால் சென்றுவிட்டது. ஜூலை 2ஆம் தேதி உன் பிறந்தநாளுக்கு நானும் என் மகளும் சேர்ந்து

தொலைபேசியில் உனக்கு பிறந்தநாள் பாடல் பாடும் போது 'happy long life to you' என்று சொல்லும் போது விளையாட்டாக 'long life எல்லாம் வேண்டாம்ப்பா' என்றாயே அது விதியின் காதில் இப்படியா விபரீதமாக விழுந்துத் தொலைய வேண்டும்? நம் நட்பில் உள்ள பலதரப்பட்ட ரகசியங்களை புதைப்பதற்காகவா நீ குழிக்குள் சென்றுவிட்டாய்? உன் பிள்ளைகளைப் பார்த்தாலே உன் தாய்மையின் பிரதிபலிப்பு தெரியுமே! எங்களுக்காக இல்லாவிட்டாலும் அபி- ஜெஸிக்காக உன் உயிரைக் கையில் பிடித்து நிறுத்தி வைத்திருக்க வேண்டாமா? எப்படி இவ்வளவு சுலபமாக விட்டுவிட்டு சென்றுவிட்டாய்?

அன்று ஃபாத்தின் 'யாஸ்மின் ஆண்ட்டி உங்களை இப்பவே பார்க்க வேண்டுமெ'ன்று அழுதவுடன் இன்ப அதிர்ச்சியாக வீட்டுக்கு வந்து நின்றாயே. இப்போதும் அவள் அழுகிறாள் உன்னைக் கேட்டு நான் என்ன சொல்லிப் புரிய வைக்க? உனது மனதைப் போன்ற மல்லிகைப்பூவை உனக்கு பிடிக்குமென்று ஊரிலிருந்து யார் வாங்கி வந்தாலும் உனக்குத் தரும் போது 'கொஞ்சம் வாடிப் போய்விட்டதே' என்று நான் வருத்தப்பட்டால் நீ முகம் மலர்ந்து 'பரவாயில்லைப்பா' என்று கொடுத்த அன்புக்காக ஆசையாக வாங்கி சூடிக் கொள்வாயே. இப்போது உனக்காக நிறையப் பூ வாங்கி வைத்துள்ளேன் எப்போது வந்து எடுத்துக் கொள்ளப் போகிறாய்? வாடுவதற்குள் சீக்கிரம் வந்துவிடு. உன் வீட்டுக்கு நான் வந்தால் காப்பி, டீ குடிக்க மாட்டேன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு என்னை பால் குடித்தே ஆக வேண்டும் என்று அன்பாகக் கட்டளையிட்டு உபசரிப்பாயே. அந்த அன்புக்காக ஏங்குகிறேன். எப்போது வருவாய்? உன் ஆங்கில புலமையைக் கண்டு வியந்து உனக்கு ஒரு வலைப்பூ பின்ன இருந்தது தெரியுமா உனக்கு? உன்னை வற்புறுத்தியாவது எழுத வைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இறைவன் வேறு விதமாக எழுதிவிட்டானே. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்: நிச்சயமாக நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை அறிவேன் அதற்காக இவ்வளவு அவசரமாக நீ அவனிடம் சென்றிருந்திருக்க வேண்டாம் யாஸ்மின்.

என்னிடம் வந்து ஏன் மன்னிப்பு கேட்டாய் யாஸ்மின்? என்னிடம் சொல்லாமல் போனதற்காகவா அல்லது இறுதி மூச்சின் வழக்கமான நியதிக்காக சம்பிரதாயத்திற்காகவா? ஏன் நீ மட்டும் கேட்க வேண்டும் - நானும் கேட்டு விடுகிறேன். என்றேனும் ஏதாவது உன் மனம் காயப்படும் படி பேசியிருந்தால் கண்டிப்பாக அது என் தவறான வார்த்தையின் தேர்வு என்பதைப் புரிந்து என்னை மன்னித்தும், நான் பல விஷயங்களில் சொல்ல மறந்த நன்றியையும் இப்போது ஏற்றுக் கொள்வாயா?

யாஸ்மின், உனக்கு நினைவிருக்கிறதா நம்முடைய துருக்கி சுற்றுலா? அந்த படங்களில் நாம் இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதை இப்போது எடுத்துப் பார்த்தால் என் கண்களில் முட்டிக் கொண்டு வருகிறது கண்ணீர், ஏன்? நீ என் வளைகாப்பில் அணிவித்த அந்த பிரத்யேக நிற வளையலைத் தேடிப்பிடித்து அணிந்து கொண்டேன். நான் அறிவிழந்து நடக்கிறேன் என்கிறார்கள் என் வீட்டார் - உன்னை இழந்ததால்தான் அப்படி என்று அவர்களுக்கு புரிய வைப்பாயா யாஸ்மின்? எதற்கும் தளராத நான் சமயங்களில் சோர்வாக இருந்தால் ஆறுதல் சொல்வாயே? இப்போது வாழ்நாளிலே இல்லாத தளர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறது, நீ எங்கே போனாய் என்னை தேற்றாமல்? மன உறுதி என்று மார்தட்டிக் கொண்டு திரியும் நான் இப்படி ஆனதைக் கண்டு என் தாயும் 'உன் தோழிக்காக வருந்துவது போல் எனது இறப்பில் வருந்துவாயா' என்று பரிதாபமாக கேட்கும் அளவுக்கு என்னை நொறுக்கிவிட்டாயே நியாயமா யாஸ்மின்? என்னிடம் ஒருவேளை நீ சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் மனதை திடப்படுத்தி இருந்திருப்பேன். உன் கடைசி முகத்தை பார்த்திருந்தால் கூட அமைதியாக நிரந்தரமாகத் தூங்கிவிட்டாய் என்று ஆறுதல் பெற்றிருப்பேன். அந்த கொடுப்பினையைக் கூடத் தராமல் சொல்லாமல் சென்றுவிட்டாயே.

உன் இழப்புக்கு பிறகு என் மகளுக்கு நான் சொல்லித் தர ஆரம்பித்துவிட்டேன் நான் இல்லாமல் இந்த உலகை அவள் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று. நம்முடைய நெருக்கமானவர்களுக்கு முன்பே நாம் சென்று விட்டால் நன்றாக இருக்கும் பிரிவின் துயரைச் சந்திக்கவே வேண்டாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு, ஆனால் அந்த அதிர்ஷ்டம் உனக்குத்தான் வாய்த்திருக்கிறது. உன்னை பற்றிய செய்தியை நம்முடைய மற்ற தோழிகளுக்குச் சொல்லும் போதுதான் எங்கள் நட்பை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் புதுப்பித்துக் கொண்டேன். நம் நட்பின் ஆயுள் குறைவு என்று தெரிந்திருந்தால் கிடைத்த அற்ப நேரங்களிலும் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.

உனக்கு எழுதிய பிறகுதான் எனக்குக் கொட்டி தீர்த்த மன ஆறுதல் கிடைத்திருக்கிறது யாஸ்மின். இந்த கடிதத்தை உன் ஜிமெயிலுக்குதான் அனுப்ப இருந்தேன். ஆனால் நான் என்றோ என் வலைப்பூவில் எழுதிய என் கதையைப் படித்துக் கிண்டல் செய்தாயே அப்போதுதான் தெரிந்து கொண்டேன் உன் மடல் பெட்டியைத் திறக்கிறாயோ இல்லையோ என் வலைப்பூவை படிக்கிறாயென்று, அதனால் எந்த மூலையில் இருந்தாலும் இந்த பாவியின் மடலை படித்துவிட்டு பதில் எழுதுவாய் என காத்திருக்கிறேன் உனக்காக பிராத்தித்தபடி.

Thursday, August 02, 2007

இரங்கல் செய்தி

நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா இன்று (01/08/07) புதன் இரவு சென்னையில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் ஜனாஸா 02-08-2007 வியாழன் அன்று நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்ய வழி செய்வோம்.

அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்
ரியாஸ் அகமது & குடும்பத்தினர்

Wednesday, August 01, 2007

சித்திரப்பிரதிமைப் போட்டிக்காக!

'தமிழில் புகைப்படக்கலை நடத்தும் இந்த மாதப் புகைப்படப் போட்டிக்காக:

இரண்டு படங்கள் மட்டுமே அனுமதி அதனால் மூன்றாவது படம் பார்வைக்கு மட்டும் போட்டிக்கு அல்ல.

படம் 1: தாய்மைக்கு வயதில்லை!


படம் 2: அம்மா என்ன தூக்கு...


படம் 3: ராணியை ஆட்டி வைக்கும் இளவரசி!
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி